கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

இந்து என்னும் அடையாளம்

ஸ்ரீ ஸ்ரீ பற்றிய என் பதிவில் வந்த ஜடாயுவின் பின்னூட்டத்தில் ஸ்ரீ ஸ்ரீ எழுதிய Hindu Identity பற்றிய கட்டுரையை பதிவு செய்திருந்தார் .

ஸ்ரீ ஸ்ரீ சொன்னது ஒரளவு நிஜம் என்றாலும் ஹிந்து ஐடெண்டி இல்லாமல் இருப்பது ஒரு வகையில் முட்டாள்தனம் என்றும் , சாதி யை ஹிந்துக்கள் தன் ஐடெண்டியாக வைத்திருப்பதும் ஒரு வகையில் இதற்கு காரணம் என்றும் சொல்லி இருந்தார் . அவர் கருத்தை ஆமோதிக்காமலும் அதே சமயம் மறுக்கமாலும் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் .

ஐடெண்டி என்பது பல சமூக காரணங்களால் ஒரு சம்சாரிக்குத் தேவைப் படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் .சாமியாருக்களுக்கேத் தேவைப்படுகிறது சம்சாரி எம்மாத்திரம் .

சமூகத்தில் ஐடெண்டியோடு இருப்பதால் பல நன்மைகள் இருக்கிறது , எப்படியிருந்தாலும் நமக்கு ஒரு அடையாளம் தேவையானதாகவே இருக்கிறது , ஹிந்துவாகவோ , பிராமணர்களாகவோ , தலித்துவாகவோ, கம்யூனிஸ்டாகவாகவோ ஏதோ ஒரு அடையாளத்துடன் இருக்கவே பிரியப்படுகிறோம். அதில் சில நம் சமூக அமைப்பில் வளரும் பருவத்திலேயே சாதி ,சமயம் ,மொழி என்று திணிக்கப் படுகிறது . சில அடையாளங்களை நாமே நம் மேல் ஏற்றி வைத்துக் கொள்கிறோம் பெரியாரிச்ட்,கம்யூன்ஸ்ட்,லிபரல் ,வலதுசாரி போன்றப் பிரிவுகளை நாமே நம் சிந்தனையால் நம் மேல் ஏற்றி வைத்து கொள்ளும் அடையாளங்கள் .

சரியோத் தவறோ அடையாளங்கள் இல்லாமல் வாழ முடியாது நமக்கும் நம் இகோவிற்கும் தீனிப் போடும் அடையாளங்களை விட்டு விட்டுப் போவது என்பது சாதரணப் பட்டவர்களால் முடியாது என்பது உண்மையே .

அடையாளம் என்று வந்து விட்டால் அவரவற்குத் தேவையான அடையாளங்களுடன வாழ்வதை எப்படித் தவறென்றுச சொல்ல முடியும் .ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தை விட உயர்ந்ததா என்ன ?

பொதுவாக பெரும்பாலோனர் தம் அடையாளங்களை இடம் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் . கிராமத்தில் நம் தெருவில் இன்னாரின் மகன் /மகள் மற்ற சாதித் தெருக்களில் இந்த சாதி பையன் (செட்டித்தெருப் பையன் /கோனாருப் பையன் )கொஞ்சம் வெளியே வ்ந்தால் கிராமப் பெயரே நம் அடையாளம . மற்ற மதக் காரர்களுக்கு -ஹிந்து நண்பர் ,முஸ்லீம் நண்பர் , மற்ற மொழிக்காரர்களுக்கு -தமிழ் நண்பர் ,தெலுங்கு நண்பர் வெளியே வந்து விட்டால் - இந்தியன் , அமெரிக்காவில் -தேசி / சவுத் ஏசியன் என்பது துணைக்கண்டத்தவரை குறிக்கும் சொல் (இந்திய/பாக்கிஸ்தான்/பங்களாதேஷ்/ஸ்ரீலங்கா )

புஷ் யை ஆதரித்தால் -வலது , ஒரின திருமணத்தை ஆதரித்தால் -இடது ,அல்ரா லிபரல் இப்படி வசதிக்காகத்தான் அவரவர்கள் தன் அடையாளங்களை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு ஹிந்துவிடம் ஹிந்து என்று அடையாளப்படாமலா இருக்கிறார். நமக்கே பேரைப் பார்த்தாலும் மற்ற அடையாளங்களிலும் ஹிந்து வென்று தெரிந்து விடுவதால் சாதி பற்றி யோசிக்க ஆரம்ப்பித்து விடுவார்கள் .

அதிலும் சிலர் பேரைக் கேட்டாலே சாதியை சொல்லிவிடுவார்கள், பேச்சை வைத்தும் சாதி கண்டுபிடித்து விடுவார்கள்.

சிவா ,சண்முகம் ,அவினாஷ் என்று யார் பேர் வைத்துக் கொள்கிறார்கள் ஹிந்துக்கள் தானே . தமிழ்செல்வியும் , புகழேந்தியும் கூட தமிழ் ஹிந்துக்கள் தான் வைத்திருப்பார்கள் .

பெரும்பால ஹிந்துக்கள் ஹிந்து அடையாளங்களோடு தானே வாழ்கிறார்கள் ,ஏதோ முஸ்லீம்கள் மட்டும் தான் மத அடையாளங்களோடு வாழ்கிறார்களா என்ன ? திரு நீறு, குங்குமம்,சந்தனக் குறி ,பூணூல் போன்றவை ஹிந்து அடையாளங்கள் இல்லையா என்ன ?

ஹிந்து அடையாளம் இல்லாத எதாவது இடத்தை இந்தியாவில் காட்டுங்கள் . இதை தவிர ஹிந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறார் ஸ்ரீ ஸ்ரீ என்றுத் தெரியவில்லை .

ஸ்ரீ ஸ்ரீ சொன்ன மாதிரி சாதி ,மூட நம்ப்பிக்கைகளும் தானே ஒரு சாதாரண ஹிந்துவுக்கு அடையாளங்களாக இருக்கிறது. எந்த ஹிந்து பிரயாணமத்தையும் தியானத்தையும் பார்த்தான் .

வேண்டுமானால் இப்படிச் சொல்லாம் ஹிந்து என்ற அடையாளத்தை உரக்கச் சொல்ல இந்திய படித்த ஹிந்துக்க்கள் கூச்சப் படுகிறார்களாக இருக்கலாம் ? இந்து என்பவன் ,தான் ஒரு இந்து என்பதிற்கு பதில் மொழியாலும் , சாதியாலும் பிளவு பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார் போலும் .

மொழியாலும் ,சாதியாலும் பிளவு பட்டுக் கிடப்பது தவறு தான்,ஆனால் ஹிந்து என்று சொல்வதாலும் தான் பிளவு ஏற்படும். அடையாளம் தேவை என்றால் அவரவர்க்கு தேவையான அடையாளங்களைத் தான் தேர்ந்து எடுப்பர் . அதை தவறு இந்த அடையாளம் தான் உனக்கு சரி எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .

தமிழன்,கன்னடன் எண்று சொல்லாதே இந்தியன் என்ரு சொல் என்று வற்புறுத்துவது கூட ஒரு வகையில் வன்முறை தான் .அது போலத் தான் நீ இந்து என்று சொல் என்று வற்புறுத்துவதும் ஒரு வகையில் வன்முறை தான் .

மேலும் இங்கு ஒன்றும் இந்துக்கள் invisible ஆக ஒன்றும் இல்லை உரக்கச் சொல்வதற்கு , சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்து என்பவன் அவன் அடையாளங்களோடு தான் வாழ்கிறான் ,கடவுள் இல்லை என்று சொல்லுகிற கருணாநிதி வீட்டில் கூட இந்து அடையாளங்கள் தான் .நம் சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் கூட மத அடையாளம் இல்லாமல் இருந்ததில்லை உதாரணம் சுர்ஜித் சிங் , இதில் யாரைப் போய் குறை சொல்ல .

சுயம் அழித்தலே உண்மையில் ஆன்மீகத்தின் உச்சம் என்று திரும்ப திரும்ப நம் இந்திய தரிசனங்க்கள் உணர்த்தினாலும் சுயம் அழித்தல் ஒன்றும் சுலபமல்ல ,சம்சாரிக்கு மட்டுமல்ல இங்கு ஞானிகளாக காட்டப் படுபவர்களுக்கும் கூட .

படித்ததில் பாதித்தது

படிப்பது என்பது அம்புலி மாமாவில் இருந்து ஆரம்ப்பித்து இப்போது கண்டைதையும் படிப்பது என்று ஆகி விட்டது ,படித்ததில் பிடித்ததை எழுதுவது என்பது கொஞ்சம் கடினம் . ஆனாலும் எழுத முயற்சிப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று தான் எண்ணுகிறேன் .

பாலகுமாரனின் கடலோரக் குருவிகள்

நல்லதொரு நாவல்.குறிப்பாய் கடைசியில் உள்ள கதைக்காகவும்,கடைசி இரண்டு அத்தியாயங்களின்எழுத்துக்காகவும் எனக்குப் பிடிக்கும் .அதிகம் வாசிப்பு அனுபவம் இல்லாத ஒருவருக்கும் புரியும் நடை எனக்குப் பிடிக்கும்.பால குமாரன் ஒரு காலத்தில் அதிகம் பிடிப்பவராக இருந்தார்.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள்
சுஜாதாவின் இந்தக் கதைகளை பிடிக்காமல் இருப்பது கடினம் .அவரின் நடை அலாதியானது.சுஜாதாவின்மேல் சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தவிர்க்க முடியாதவர் ,அவரின் எல்லா எழுத்துக்களையும்படிக்க முயற்சிப்பேன், வசந்த் கணேஷ் தவிர :-) .சுஜாதா வின் நடையும் அவரின் எள்ளலும் பிடித்தது .

சு செல்லப்பாவின் வாடிவாசல்

படித்துப் பாருங்கள். ஜல்லிக் கட்டு பார்ப்பது போன்ற பிரமிப்பை கொடுக்கும் நாவல்.இப்பவும் எப்பவாதுஎடுத்து ஒரே வாசிப்பில் படிப்பேன்.நன்றி காலச்சுவடுக்கு இதை மறு பதிப்பு இட்டதுக்காக.

தொ பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்

நம் கலாச்சாரத்தை பற்றிய ஒரு ஆய்வு மாதிரியான நூல் ,நெல்லை கன்யாகுமரி மாவட்டங்களில்இன்னமும் செய்யப்படும் சில பழக்க வழக்கங்களையும் இந்த புத்தகம் சொல்லியிருந்தது .அத்தன் என்னும்சொல் பண்டையத் தமிழில் அப்பாவைக் குறிப்பதாக சொல்லியிருந்தார்,இன்னமும் தமிழ் முஸ்லீம்கள்அத்தா என்று கூப்பிடுவதை ஞாபகப் படுத்தியது.

அ.முத்துசாமியின் "அங்கே எந்த நேரம் / மஹாராஜவின் ரயில் வண்டி
பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் .இந்த இரண்டு சிறுகதை தொகுப்புகளும் அருமை.அவர்நடையில் இயல்பாய் இருக்கும் பகடி ரசிக்க வைக்கும் .இவரைப் பற்றி தனிப் பதிவேப் போடலாம் அவ்வுளவுப் பிடிக்கும் எனக்கு.

ஷோபா சக்தியின் ம்

ஷோபா சக்தியின் கதை உலகம் ஈழப் போரட்டத்தின் மறுபக்கங்களையும் புலம் பெயர் வாழிவின்வலிகளையும் தொட்டுச் சொல்வதும் அவரின் நடையும் எனக்குப் பிடிக்கும் .கொரில்லாவும் பிடித்ததுதான்.சத்திய கடுதாசியில் அவர் எழுதுவதையும் வாசித்து வருகிறேன்.

ஜெயமோகனின் ஏழாம் உலகம்
அவரின் மற்ற நாவல்களில் இருந்து வேறுபட்ட மொழி நடையை கொண்ட நாவல்.அவரின் விஷ்ணு புரம்அல்லது பின் தொடரும் நிழல் போல் கடினமான மொழி நடையோ அல்லது சிக்கலான கதை அமைப்போ இல்லாத இந்த நாவல் வாழ்க்கையில் நாம் சந்திக்க மறுக்கும் ஒரு கறுப்பு உலகத்தின் கதை.படித்த பின் விசாரித்தில் இது நடக்கிற உண்மை என்றே சொன்னார்கள். ஜெய மோகனை மறுப்பவர்கள் கூடஇந்த நாவல் பிடிக்கும் .ஜெய மோகனின் சிறு கதைகளில் பிடித்த மானது மாடன் மோட்சம் ,டார்த்தீனியம் ,ஜமம்மதிகினி

சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதைநம்ம

நாகர்கோவில் வேப்ப மூடு ஜங்க்சனை வைத்து புனையப் பட்ட நாவல் ,அதன் மொழிநடையும் பகடியும் எனக்குப் பிடித்தது.ஜெ ஜெ யின் குறிப்புகள் சில சமயம் சலிக்க வைக்கும் ,இதுஅப்படி இல்லை என்று கண்டிப்பாய் சொல்லலாம..இவர் மொழி பெயர்த்த தழியின் தோட்டியின் மகன் அருமையானது.

தோப்பில் முகமது மீரானின் கடலோர கிராமத்தின் கதை

தேங்காப் பட்டின இஸ்லாமிய வாழ்க்கை பற்றிய நாவல் .அருமையான நடை ,மொழியும் ,இக்கதையின்ஆக்கமும் படிக்கத் தூண்டியவை .

சாருவின் நோ நோ கதைகள்

இச் சிறுகதை தொகுப்பு அவரின் மொழி நடைக்கும் நையாண்டிக்கும் எழுதாப் பொருள் என ஒண்ணும் கிடையாது என மரபுகளை உடைக்கும் தன்மைக்காகவும் பிடிக்கும் .

கி ராஜ நாரயணின் கோபல்ல புர கிராமம்

கிரா வின் ரசிகன் நான் ,மொழி நடைக்காக வே படிக்கலாம்.மற்ற நாவல்களும் படித்து உள்ளேன்.வெகு ஜன ஊடகத்திலும் தெரிந்தவர் என்பதால் நண்பர்களுடன் இவர் எழுத்தைப் பற்றி விவாதிக்க முடியும் .

ராம கிருஷ்ணனின் உப பாண்டவம்

மகாபாரதத்தின் கதைகளை ஒத்த கதை.நல்ல வாசிப்பனுபவம் ,மகாபாரதம் எத்தனை முறை படித்தாலும்அலுக்காத ஒரு காவியம் ,அதை படிப்பதால் வரும் சிந்தனைகள் அருமை.இதைப் போல பாரதத்தின் கதைகளை வித்தியாசமாக எழுத முயற்சிக்கலாம் .

இரண்டாம் ஜாமத்தின் கதை -சல்மா

சல்மாவின் கவிதை பிடித்து ,இந்த புத்த்கமும் ஒரு நல்ல முயற்சி .இது பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சல்மாவின் எழுத்தில் குறே யேதும் இல்லை

நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம்

சூபி ஒருவரைப் பற்றிய கதை ,சூபி ஆன்மீகத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் படிக்க வேண்டியப் புத்தகம்,கதை என்ற் போதிலும் இது ரூமியின் அனுபவமாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம் .

பெருமாள் முருகனின் கூளமாதாரி

ஒடுக்கப் பட்டவர்களின் வாழுக்கை முறையைப் சொல்லிய நாவல்,சில உண்மைகள் சுடும் .மாயா உலகில் சமத்துவம் பேசிக் கழியும் மக்களுக்கு இது அதிர்ச்சித் தரும் நாவல் .இந்த மாதிரியான வாழ்க்கை முறை இன்று இருக்குமா என்பதில் சந்தேகம் இருந்தாலும் 20 வருடங்களுக்கு இப்படி இருந்தது என்பதில் ஐயமில்லை.

இமையத்தின் கோவேறு கழுதைகள்

துணி வெளுக்கும் வண்ணார் வாழ்க்கை முறை பற்றிய கதை ,கிருதுவராக மாறிய்ம் பெரிதாய் ஒன்றும் வாழ்க்கை முறையில் மாற்ற மில்லை .சில நிகழ்ச்சிகள் எங்கள் ஊரில் இருந்த வண்ணார் குடும்பத்தின் வாழ்க்கையை ஞாபகப் படுத்தியது.இது போன்ற கதைகள் தான் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை வரலாற்றுக்கு சொல்லும் .

இது அனைத்தையும் என் நினைவில் இருந்து எழுதியது ,அப்பொழுது தான் மனடில் நின்றதை எழுத முடியும் என்ற நினைப்போடு .கவிதைத் தொகுப்புகளையும் ஆங்கிலப் புத்தகங்களையும் இதில் சேர்க்க வில்லை .
வாசிப்பதில் ஒன்றும் பெருசில்லை என்ன புரிந்து கொண்டோம் என்பது தான் முக்கியமானது ..வாழ்க்கையை எல்லா பக்கங்களில் இருந்தும் புரிந்து கொள்ளவே என் வாசிப்பு முயற்சி , இதுவும் ஒரு தேடல்தான் ,எனக்கான புத்தகம் எங்கோ ஒளிந்திருக்கும் அது தெரியும் வரை வாசிப்பு தான் சாஸ்வதம்

ஆஙகிலத்தில் படித்தது குறைவு தான் ,பெரும்பாலும் அரசியல் அல்லது ஆன்மீக புத்தகங்கள் தான் படிப்பது ,ஒரு காலத்தில் சிட்னி செல்டன் ,ராபர்ட் லூடம் ,ஜான் கிரிசாம் போன்றவர்களின் கதைகளை படித்துக் கொண்டிருந்தேன் ,அதை தாண்டி ஆங்கிலத்தில் இலக்கியத் தரமுள்ள கதைகளுக்கு நகர முடியவில்லை .மொழி அறிவின் போதாமையும் ஒரு காரணம் .நான் பிக்சன் வாசிப்பு இப்போது அதிகம் ஆகியிருக்கிறது ஆனால் அதிகம் அரசியல் படிக்கிறது போல் தோன்றுகிறது.

Labels:

கவித ?

சில கிறுக்குப் பிடித்த நாட்களில் கிறுக்கிய எழுத்துக்கள்,முன்னமே சொன்ன மாதிரி கவிதை மேல் எனக்கு காதல் உண்டு ,எனவே கவிதை என்று என் எழுத்தை சொல்லி கவிதையை கொச்சைப் படுத்த முனைவிதில்லை ..

ஏதோ சந்தர்ப்பத்தில் எழுதிய கவிதைகளுக்கு தலைப்பை இன்று தான் கொடுத்தேன் ,தலைப்பு சரியா அல்லது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு தோதான தலைப்புகளை ..

கடைசி கிறுக்கலுக்கு தலைப்பு வைக்கக் கூட கற்பனை பஞ்சம் ..
உங்களுக்கு ?

எல்லா நாய்க்கும் ஒரு நாள்


திருடனைப் பார்த்து குரைத்தலில்
உயிரை இழக்க சாத்தியம்
வீட்டுக்காரனின் சொந்தத்தை குரைத்தலில்
அடிகிடைக்கும் சாத்தியம்
அவரின் பிள்ளைகளுக்கு ஒரு செல்லக் குரைத்தல்
அம்மாவுக்கோ ஒரு விசுவாச குரைத்தல்
மார்கழி மாசம் பருவக் குரைத்தல்
அதுவும் இப்போ இல்லை
ஆப்பிரேசன் பண்ணியாச்சு
உரத்துக் குரைத்தலே உயர்வு
பார்த்து குரைத்தலே வாழ்வு
எல்லா நாய்களுக்கும் ஒரு நாளுண்டு
அவர்களுக்கேயாய்
அன்று நான் குரைப்பேன்
எனக்குப் பிடித்த மாதிரி
எனக்கு மட்டுமேயான குரைத்தல்

------

புத்தியின் வார்த்தைகள்

எனக்கு உவப்பாயில்லை
ஏகாந்த வேளையில்
கனவுகளாய் நான் ஒரு
கவிதையை எழுதுகையில்
உன் வார்த்தைகளை
தத்துவங்களை எனக்கானக்
கவிதையில்
நீ
திணிப்பது
உவப்பாயில்லை எனக்கு



----
வீசப் படும் குண்டுகளின்
வெப்பத்தையும்
தாண்டி
உன்னை அணைத்த சூடு
இன்னமும் தெரிகிறது
உயிர் பிழைத்தலே பிரதானம்
இன்னொரு முறை உன் சூடு
கிடைப்பதற் காவது

Labels: , ,

அமெரிக்க அடிவருடி

அமெரிக்கா என்பது இந்தியாவின் அறிவு ஜீவி வட்டத்தில் ஒரு ஏதேச்சாதிகார மையமாகவும் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் கொலைசெய்யும் ஒரு நாடாகவே இருந்து வந்தது ,அதில் பேரளவு உண்மை இருந்தாலும் அமெரிக்காவின் மறுபக்கமான ஜனநாயகம், திறமைகாரர்களை எங்கு இருந்தாலும் அமெரிக்கா வர ஊக்குவிக்கும் அரசும் , கனிவான மக்களும் உள்ள ஒரு நாட்டையும் காட்டத் தவறியது.

ஆனால் சோவியத்தின் நிறைகளை மட்டுமே பார்த்து குறைகளை பார்க்க மறுத்த ஒருப்பார்வை இடது சாரி சார்ந்த பார்வையாளர்களால் உருவாக்கப் பட்டிருந்தது.

இந்தப் பாரபட்ச பார்வை பார்வை எல்லா தர மக்களிடமும் ஒரு விதத்தில் அமெரிக்க பற்றிய வெறுப்பை கொடுத்து வந்தது சமீபத்திய காலம் வரை நடந்து வந்ததொரு யாதார்த்தம் .கேரள சேட்டன்மார்கள் பருவ மழை வரவில்லா விட்டாலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் சதி செய்து விட்டதாக பேசுவார்கள் . சோவியத் ரஷ்யா நமக்கு நண்பர்களாகவே அடையாளம் காட்டப் பட்டோம் , சாதாரண மக்களிடத்திலும் கூட ரஷ்யா பாசம் இருந்ததிற்கு காரணம் அன்றைய பலத் தலைவர்கள்சோவியத் ரசிகர்களாக இருந்ததும் ஒரு காரணம் .ஏகாதிபத்தியம் என்பது ஏதோ அமெரிக்கா மட்டும் பண்ணுகிற விசயம் போல் பேசும் இவர்கள் சோவியத் நடத்திய நாடு பிடிக்கும் அநியாயங்களின் மேல் ஒரு விமர்சனத்தையும் சொல்வதில்லை . இன்னமும் கூட சோவியத் விசயத்தை விமர்சனம் செய்தால் நல்லதொரு அர்ச்சனை கிடைக்கும்.

சோவியத் நமக்கு பல இக்கட்டான விசயங்களில் உதவியிருக்கிறது , அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து சில பல நமக்கெதிராய் செய்து உள்ளது , அதை நான் இல்லை என்று சொல்ல நான் முட்டாள் ஒன்றும் இல்லை.

ஆனால் இன்றைய மாறி வரும் உலகச் சூழலில் நடு நிலைப் பார்வையில் சோவியத்தின் தவறுகளையும் ,அமெரிக்காவின் வெற்றிக்கானக் காரணங்களையும் நாம் பார்க்கத் தவறினால் அது ஒருவருடைய புரிதலின் குறைபாடே அன்றி வேறல்ல , இது அமெரிக்க அதரவு /சோவியத் எதிர்ப்பு என கண் மூடித் தனமாய் பேசுபவர்களுக்கும் பொருந்தும் .

இன்றையக் காலச்சூழலில் அமெரிக்கா என்பது தேவைப்படுகின்ற ஒரு ரவுடி. அமெரிக்க உணர்வுகளைப் பொறுத்தே இன்றைய உலகத்தின் எல்லா நாட்டு அரசியலும் நடக்குகிறது ,வரும் காலங்களில் அதன் பலம் சைனா , ஐரோப்பா ,இந்தியா வளர்ச்சிகளால் ஒரளவுக்கு மாறலாம் என்றும் கூட இது தான் நிதர்சனம் இன்று.அமெரிக்கா அடாவடியாக செய்யும் பல காரியங்கள் அமெரிக்கர்களிலேயே பாதி பேருக்கு ஒப்புமை கிடையாது .

அமெரிக்காவில் நான் அறிந்த வரையில் கற்றுக் கொள்ள வேண்டியது அதன் தனி மனித சுதந்திரம் பற்றிய கொள்கை மற்றும் Dynamic ஜனநாயகம் . ஜனநாயகம் அருமையாக இங்கு வேலை செய்கிறது . யாரோ இணையத்தில் புளோரிடா விவகாரத்தை மட்டும் சொல்லி அமெரிக்காவின் ஜனநாயகம் கேலிக் கூத்து என்று கருத்துத் தெரிவித்திருந்ததைப் படித்த போது சிரிப்பு தான் வந்தது.

அமெரிக்காவில் ஷெரிப்பில் இருந்து பப்ளிக் அட்டெர்னி வரைக்கும் தேர்ந்தடுக்கப் படுபவர்கள் தான் .சும்மா உடன் பிறப்புகளுக்கும் , ஜால்ராக்களுக்கும் கொடுக்கும் பதுவி அல்ல .அதனால் தான் அவர்கள் தங்களை தேர்ந்த எடுக்கப் பட்டவர்களின் மன நிலையை புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,சான் ப்ரான்ஸ்கோவில் அல்ரா லிபரலும் ,டெக்சாசில் இவாஞ்சுவலிஸ்டும் பதவியில் வருகிறார்கள்.மக்களின் மனோ நிலையை பிரதிபலிக்கும் ஒரு தலைமை ,அது தானே சரியான ஜனநாயகம்.


அது மட்டுமல்ல அருமையான பெடரல் அமைப்பு அது .மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அதிகமே , நிறைய விசயங்கள் மத்தியஅரசு தலையிட முடியாது .அது போல் சிட்டிக்களுக்கும் ( நம்ம பஞ்சாயத்து போல்) அவர்களுக்கான பட்ஜெட்டுகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப் படுவது போல் அருமையான விசயம் எதுவும் இல்லை . நாம் செலுத்தும் வரி எப்படி செலவழிக்கப் படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொருவனுக்கும் உரிமை இருக்கிறது . வீட்டில் இருந்த படியே இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் .

தொழிலாளர் உரிமைகள் கண்டிப்பாய் நம்ம ஊர்களை விட அதிகமே .ஸ்டிரைக் பண்ணுவது மட்டும் தான் தொழிலாளர் உரிமையா என்ன ,அது கூடப் பண்ணலாம் அதற்காக பொதுச் சொத்தையோ ,தனியார் சொத்தையோ சேதப் படுத்த முடியாது.

கோர்டில் பொய் சொல்வது தான் பெரிய குற்றம் ,நம்ம ஊரில் எங் கையெழுத்து இல்லை என முதலமைச்சரே சொல்லலாம் .கோர்டும் சும்மா இருக்கும் .கிளிண்டன் விவகாரத்தில் அவர் பொய் சொன்னது தான் அவரை நாற அடித்தது .

இன்றைக்கு இராக் விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு குரல் வந்தது இங்கிருத்தும் தான். நைஜர் விவகாரத்தில் ஜனாதிபதி சொன்னது தவறு என்று சொல்ல வைக்க இங்குள்ளவர்களால் முடிந்தது. காங்கிரசில் ஈராக்குக்கு அதிகம் காசு கொடுக்க முடியாது என்று ஆப்பு வைக்க முடிந்தது , ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவர் அதிகாரத்தை தவறாய் பயப் படுத்தினால் இப்படி அடுத்த எலெக்ஸனில் தான் காட்ட முடியும் .அமெரிக்கா செய்ததற்கு வக்காலத்து வாங்கும் முயற்சில்லை என் பதிவு .

என்னுடைய எண்ணம் என்ன வென்றால் ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .அல்குவைதா டிரேட் சென்ரர் தாக்குதல் நடக்காதிருந்தால் புஷ் ஈராக் மேல் படையெடுக்க காங்கிரஸ் /செனட்டில் இருந்து பெற்றிருக்கவே முடியாது . தங்களின் மேல் குண்டு விழக் காரணம் ஈராக் தான் என்று சொல்லப் படும் போது எந்த மனிதன் தான் சும்மா இருப்பான் , அதனால் தான் மக்களின் ஆதரவும் செனட்டர்களின் ஆதரவும் இருந்தது . சொன்னது எல்லாம் தவறு என்று தெரிந்தது என்றதும் மக்கள் ஆதரவு குறைந்தது தேர்தலில் சரியான அடி வாங்கினார்கள் . இது ஒரு ஜனநாயக நிகழ்வா இல்லையா . சோவியத்தில் இன்னமும் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியவில்லை . புடின் புஷ் யை விட மோசமாய் தான் நட்ந்து கொள்கிறார்.சைனா நடத்தும் அநியாங்களை கேட்கவே ஆளில்லை.

ஆனால் இன்றையச் சூழலில் அமெரிக்க எதிர்ப்பு பாலஸ்தீனிய பிரச்சினையை மையம் கொண்டே உள்ளது , இராக் விவகாரத்தில் அமெரிக்காவின் மேல் தார்மீகக் கோவம் உலகத்தில் முஸ்லீம்களுக்கு இருக்கிறது.

ஆனால் இணைய இஸ்லாம் நண்பர்கள் இஸ்லாம் நாடுகளில் இருக்கும் எல்லா விசயங்களும் பாலஸ்தீனிய பிரச்சினை யை மட்டுமே மையமாகப் பார்க்கிறார்கள். அமெரிக்காவை மட்டும் அனல் கக்கும் விழியுடன் விசம் கக்கும் அவர்கள். அவர்களே ஆதர்ச நாடுகளான சவுதி அரேபியாவும் ஜோர்டனும் அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருப்பதைப் பற்றி எந்த விமர்சனமும் நான் இணையத்தில் பார்த்ததே இல்லை. நியாயமாய் அவர்களைத் தானே இவர்கள் திட்ட வேண்டும். அமெரிக்கா மற்ற நாடுகள் விசயத்தில் எப்படி யிருந்தாலும் அவர்களின் சொந்த மக்களை சந்தோசமாய் தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த இஸ்லாமிய நாடுகளின் மக்கள்எவ்வுளவு சந்தோசமாய் இருக்கிறார்கள். நம்முடைய பாகிஸ்தான் நண்பர்களில் எல்லா பணம் உள்ள நண்பர்கள் எல்லாரும் அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறதற்குக் காரணம் என்ன ? எல்லோரும் அமெரிக்க வாழ்க்கையை விரும்பினாலும்டெஸ்பரேட்டாக இருப்பது யார் ?
எல்லா விசயங்களிலும் சும்மா அமெரிக்காவை மட்டுமே குறை சொல்லாதீர்கள் .

அமெரிக்கா செய்வதற்கெல்லாம் வக்காலத்துவாங்கவில்லை நான் . நம் நாட்டில் உள்ள மக்களும் அரசியல் தலைவர்களும் ஒழுங்காய் இருந்தால் ஏன் அமெரிக்கா பிரச்சினை பண்ண முடிகிறது . ஒற்றைப் பார்வையில் எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்ல முயற்சிக்காதீர்கள் சன்னலை திறந்து கொஞ்சம் வெளியேயும் பாருங்கள்.

PS

தலைப்பு உதவி -கால்கரி சிவா. அவரிடம் இருந்து சுட்டது

Labels: ,

தேடலின் இயல்பு -1

மதம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் ,இறை குறித்த தேடல் தொடர்ந்து செய்தே வந்துள்ளேன். ஆன்மீக நாட்டம் அதிகம் ஆக ஆக மதம் குறித்த விமர்சனங்களும் அதிகம் ஆகியது . ஆன்மீக்ம் என்பது கோவிலுக்குச் செல்வதோ அல்லது அவரவர் மதங்களின் பழக்கப் படி கடமையை செய்வதோ அல்ல என்பது
புரிந்தது . கடவுள் மறுப்பு அவர் மேல் வைக்கப் படும் விமர்சனங்களும் கூட ஒரு வகையில் ஆன்மீகமே . மதம் பற்றி பல குற்றச்சாட்டுகள் எனக்கு இருந்தாலும் கோவிலுக்குப் போவது பிடிக்கும் அதற்காக தீபாவளி ,பொங்கல் நாட்களில் கண்டிப்பாய் போகே ஆகி கூட்டத்தில் இடிபட்டு இரண்டு பேரை மனதில் திட்டுவதற்கு கோவிலுக்கே போக வேண்டாம் . அதீத வேசம் கட்டும் பக்தியாளன் நான் இல்லை. ஆனால் இந்தியாவில் குறிப்பாய் தமிழ் நாட்டில் கோவில் பார்க்கவே இன்னுமும் ஆசை , சாமிகும்ப்பிடுவது என்ற சம்பிரதாயம் கடந்து புரிந்து கொள்ளவே கோவில் செல்வேன் . இங்கே அமெரிக்காவில் கோவில் செல்வது சம்பிரதாயம் மட்டுமே ,முன்னேல்லாம் சாப்பிடவே செல்வேன் .
இப்போது மனைவிக்காகவும் ,நண்பர்களுக்காகவும் .

ஆனால் தேடுதலை ஆன்மீக குருக்களை கவனித்தலையும் அவர்களின் கருத்துக்களை படிப்பதும் மூலமாக தொடர்ந்து வந்தேன். ஆனநத விகடனில் மனசே ரிலாக்ஸ் புகழ் சுகபோனந்தா வின் பகவத்கீதை லெக்சர்களுக்கும் ,இரண்டு தடவை அவரின் LIFE கோர்ஸ் போயிருக்கிறேன் .அவரின் பேச்சுத் திறமை எனக்குப் பிடிக்கும் .லைப் புரோகிராமில் தியானம் ,சில விளையாட்டுக்கள் , கலந்துரையாடல் ,நடனம் என்று ஒரே மிக்ஸ் யாய் இருக்கும் நன்றாகவே இருக்கும் . ஆனாலும் தீவிரமான ஒரு புரிதலும் ஏற்படவில்லை .அவர் பலவற்றை அறிவு பூர்வமாகவும் ,தர்க்க பூர்வமாகவும் விளக்க முயற்சி செய்த்தை நான் புத்த்கங்கள் வழியாகவே செய்து கொண்டிருந்தேன் . சுகபோனந்தா ஒரு அறிவு ஜிவியாகவும் ,வேதங்களையும் பல புத்தகங்களை நன்கு படித்த தர்க்க ரீதியான ஒரு சாமியாராகத் தான் பார்த்தேன். இருந்தாலும் இன்னமும் அவரின் பேச்சுக்களை கேட்கப் பிடிக்கும் ,அவர் இங்கு வந்தால் அவரின் பகவத் கீதா லெக்சர்களுக்கு போய் வர முயற்சிப்பேன்.

ஐந்து வருடங்களுக்கு முன் கோயம்பத்தூரில் கோவைக் குற்றாலம் சென்று வரும் வழியில் கார் ஓட்டுனர் வெள்ளியங்கரி மலையில் உள்ள தியான மண்டபம் பற்றி சொல்லியதால் அங்கு சென்று வந்தேன் .தியான லிங்கத்தின் சுற்றியிருக்கும் ஒரு தியான அறையில் இருந்து தியானம் செய்ய முயற்சி செய்த போது ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது ,ஆனால் என்னுடன் வந்திருந்த அம்மா,அப்பா அக்கா ஆகியோரை அதிகம் நேரம் காக்க வைக்க விரும்பாமல் சில புத்த்கங்கள் மட்டும் வாங்கி விட்டு திரும்பி விட்டேன் .புத்தகங்களை படித்த போது ஜக்கி மேல் ஒரு பிரியம் உண்டானது .அவரின் பல பதில்கள் சுகர் கோட் இல்லாமல் தெளிவாக இருக்கும் .அவர் பக்தி பற்றி சொல்லிய கதைகள் சிந்திக்க வைத்தது. அவரும் தியான வகுப்புகள் நடத்துகிறார் என்று நண்பர்கள் சொல்லித் தெரியும் . ஜக்கி ஒரு குருவுக்கான எல்லாத் தகுதியும் உள்ளவர் என்பது என் எண்ணம் . அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் எனக்குத் தெரியும் ,ஆன்மீகப்பாதையில் உள்ளவர்கள் மேல் நம் மதிப்பீடுகளை சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீக ரீதியாக ம்ட்டுமே வைக்க வேண்டும் . விருப்பம் இல்லாமல் அவர் யாரையும் சாமியாரக்க முடியாது .

என் நண்பரின் வழியாக நித்யானந்த சுவாமிகளின் லெக்சர் கேட்டிருக்கிறேன் ,அவர் அருமையாக பல விசயங்களில் பேசியிருக்கிறார் .அவரும் சீரியசான சில தியான கோர்ஸ்கள் நடத்துகிறார்.என் நண்பரின் அனுபவம் நன்றாகவே இருந்ததாகவே சொன்னார்.சிறிய வயதில் அவர் பல விசயங்களைப் பற்றி நன்றாகவேப் பேசுகிறார்.ஆனாலும் என் பகுத்தறிவு மயக்கம் அவ்வுளவு எளிதாய் எல்லோரையும் நம்ப மறுக்கிறது .நித்யானந்தரிடம் நானும் எனர்ஜி தரிசனம் வாங்கி இருக்கிறேன் ,ஒரு மாதிர்யாக இருந்தது ,கொஞ்ச நேரம் போதையாக அவ்வுளவு தான் .விபாசனா தியானம் பண்ணிக் கொண்டு இருந்ததால் குழப்ப வேண்டாம் என்று இவரின் தியானத்திற்கு நான் செல்ல வில்லை .

அம்மா என்கின்ற அமிர்தானந்த மையி ,இவர்கள் போட்டோ எங்கள் வீட்டில் 90களின் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது ,என் தாத்தா பாட்டி இவர்களை கேரளாவில் சந்தித்து பக்தர்களாகி விட்டிருந்தனர். அப்போதல்லாம் நான் இவரை
அதிகமாய் கிண்டலடித்து கொண்டு ஆச்சியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பேன். அதன் பிறகு அம்மா தமிழ் நாட்டிலும் பாப்புலர் ஆகி வந்ததை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அவ்வுளவாக அக்கறை காட்டவில்லை .எனக்கு அவரின் பகதர்கள் அம்மாவின் மேல் வைத்திர்க்கும் பக்தியை நான் அவ்வுளவாக ரசிக்க வில்லை ,அது ஆன்மீகம் அல்ல என்பது அப்போதைய நிலைப்பாடு .
அதன் பிறகு விபாசான சென்றிருந்த போது யோசிமெட்டியில் இருக்கும் ஒரு யோகா ஆசிரியர் (வெள்ளைக்காரர் தான்) அம்மாவைப் பற்றி புகழ்ந்த படி இருந்தார். அம்மாவைப் பார்க்க அவரும் அவர் நண்பர்களும் தொடர்ந்து 3 நாட்களாய் 200 மைல் வண்டி ஓட்டி வந்திருந்தார்களாம் . அப்படி அவர் சொன்ன போது அப்படி என்ன இருக்கிறது என்று தோண அந்த வருடம் அம்மா இங்கு வந்த போது போயிருந்தேன் . ஓ அது ஒரு பக்தி கல்டின் பெரும் கூட்டம் ,பெரும்பாலும் அமெரிக்கர்களை மட்டுமே நான் பார்த்தேன் ,இந்தியர்கள் குறைவு தான். கண்ணீரில பஜன் செய்யும் கூட்டத்தையும் ,அம்மாவை கட்டிப்பிடித்து பீறிடும் அழுகையை அடக்கி கொண்டு வரும் நபர்களைப் பார்க்கும் பொழுது எனக்குக் கொஞ்சம் பயமாய் தான் இருந்தது. அந்த பஜன் கூட்டத்தில் நாங்களும் சேர்ந்து இருந்த போது உணர்ச்சிகள் கொந்தளிப்பதை தாங்க முடியாமல் நான் எந்திருத்து வெளியே வந்து மற்றவர்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.பல கதைகள் பலர் என்கிருந்தோ வந்து 10 நாட்கள் அம்மாவைப் பார்க்கவே என்று வந்து அருகாமை ஹோட்டல்களில் தங்கி இருக்கிறார்கள் ,பலர் Mid west ,Canada இல் இருந்தும் சிலர் Europe இல் இருந்தும் வந்து தங்கிருந்ததைப் பார்த்து எதற்காக இப்படி என்று தோன்றியது ,இது ஒருவித கல்டோ என்ற தயக்கம் கூட இருந்தது ( என் புத்தி அப்படி ) .ஆனால் சிலரையும் அவர்கள் அம்மாவிம் மேல் வைத்திருந்த நம்ப்பிக்கையும் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையின் துவளும் சமயம் இந்த நம்பிக்கைகள் அவர்களை காப்பாற்றியதாக சொல்வதை கேட்ட போது ..கல்டாக இருந்தாலும் என்ன நல்லதே என்று தோன்றியது . அம்மா வந்திருக்கும் எல்லோரையும் அணைப்பார் வந்திருக்கும் எல்லோரையும் அது பலருக்கு வெடித்து கிளமபும் உணர்ச்சியின் அழுகைகளாக இருந்தது ஆச்சிரியம் . எனக்கு நிஜமாய் பயமாய் இருந்தது அழுது விடுவோமோ என்று .அப்படித் தான் இருந்தது எப்படியோ கட்டுப் படுத்திக் கொண்டு வந்துவிட்டேன் ( புத்தியின் சாரம் அப்படி ஆன்மீகமும் புத்தியும் நேரதிர் , நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி )
இதை எழுதும் போது கூட அந்த நாளின் உணர்ச்சிகள் சிலிர்க்க வைக்கிறது.

சரணடைதல் என்ற உயரியத் தத்துவமே எல்லா பக்தி சார்ந்த மதங்களுக்கும் காரணம் ,இந்திய மதங்களின் பிரதானமே அது தான் . இராம கிருஷ்ண பரமகம்ஷரின் அடிப்படையே அது தான் . ஆனால் என்னைப் போன்றவர்கள் புத்தி அவ்வுளவு எளிதில் அதை செய்ய விடுவதில்லை . பெரும்பாலானோர் அப்படித் தான் , நான் கொஞ்சம் மோசம் ,என்னை விட மோசமானவர்களையும் பார்த்து இருக்கிறேன் , சூப்பர் ஈகோ உள்ளவர்கள் தேடுவது வேறொன்றை பக்தியை அல்ல .சரணடையத் தெரிந்தவர்களுக்கு எந்த மதமாயினும் பிரச்சினையில்லை இல்லாதவர்கள் தான் என் மதம் ,என் வழி ,என் குரு என்று சண்டை இட்டுக் கொண்டு இருப்போம் . எனக்கும் புரிந்தது நான் தேடுவது வேறு எதையோ என்று ,அல்லது சரணடைய இன்னமும் பக்குவப் படவில்லை என்று .

தேடலின் தேவையே நம்மப் பற்றிப் புரிந்து கொள்ளத் தான் ,என் மற்ற அனுபவங்களையும் பிடித்த படித்த ஆன்மீக குருக்களைப் பற்றி அடுத்தப் பதிவில் எழுதுகிறேன் .

Labels: ,

இழப்பின் வலிக்கான மருந்தென்ன ?

பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறந்து தான் தீர வேண்டும் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் சாவை எதிர் கொள்ள பயம் நம் எல்லோருக்கும் .அதிலும் நம்அன்புக்குப் பாத்திரமானவர்களின் மரணம் நம்மை உணர்ச்சிமயமாக்கும் , பெரும்பாலும் நம்மால் இறந்தவர் நம் மேல் வைத்திருந்த அன்பும் நாம் அவர் மேல் வைத்திருந்த அன்பே அவர்களின் இழப்பிற்காக நாம் அழுவதற்கான பெரும் காரணம் .

எங்கள் ஊரில் பெரியவர்கள் சொல்லுவார்கள்பிள்ளை தலை மேல் ஏறி போக வேணும் அதுவே சந்தோசம்ன்னு ,எனக்கு சின்ன வயசில் புரிந்ததில்லை. ஆனால் இப்போது யோசிக்கும் போது பெரியவர்/பெற்றோர் இருக்க பிள்ளைகளை அவர்கள் இழப்பது பெரும் கொடுமை அது அவர்களை எவ்வுளவு பாதிக்கும் என்பதை. அதிலும் சாவு துர்மரணமாய் சம்பவிக்கும் போது வரும் வலி ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. சுனாமி போன்ற பேரிழப்புகளில் பிள்ளைகளை இழந்தவர்களின் வலியை நம்மால் உணரவே முடியாது . சுனாமி போன்ற இயற்கை அழிவிற்கு விதி என்று பெயரிட்டாவது நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் , ஆனால் ஏழு வருடங்களுக்கு முன் ஜெ தண்டனைக்கு எதிர்ப்பு என்றுசொல்லி எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளின் இழப்பை அவர்கள் பெற்றோர் தாண்டி வருவது மிகக் கடினம் . அவர்களின் பெற்றோரில் ஒரு அம்மாவுக்கு மன நோய் வந்து விட்டது என்றும் மற்றொருவர் அடிக்கடி தன்னையே சுட்டுக் கொள்கிறார் என்பதை வார இதழ்களில் படிக்கும் போது அவர்களின் வலி நமக்குத் தெரிகிறது. அதுவும் செய்திகள் என்றப் பெயரில் நீயூஸ் சேனல்களின் விசுவல் வன்முறை கொஞ்சம் அதிகம் ,சம்மந்தப் பட்டவர்கள் அதனைப் பார்ப்பவர்களுக்கு எவ்வுளவு வலி இருக்கும் என்பது செய்தி உடகங்களுக்கு புரியா விட்டாலும் நமக்குப் புரியும் . இந்த இழப்பு சாதாரணமானது அல்ல ,எதோ விதி என்று சொல்ல நோயில் யாரும் இறக்கவில்லை போர் சூழலிலும் இல்லை ,தனிப் பட்ட கோவமோ ,விபத்தோ இல்லை . யாரோ சில முட்டாளின்அரசியல் ஆசையால் வந்த வினை.

இழப்பின் வலியைக் எந்த ஒரு தீர்ப்பும் கொடுக்க முடியாதுஎன்றாலும் கொலைகளுக்கு ஒரு நீதி கிடைத்தால் அது அவர்களுக்கு ஒரு சமாதானத்தைக் கொடுக்கும். வந்திருக்கிற நீதி 3 பேர்க்கு மரணத்தையும் மற்றோருக்கு சிறையையும் விதித்திருக்கிறது . கொலைசெய்தவனுக்கு மரணம் என்பதே சரி என்று எல்லோருடைய வாதமும் .நீதிபதி Rarest of the Rare கேசுகளில் இதுவும் ஒன்று என்கிறார். ஆனாலும் தூக்குத் தண்டனை எந்த விதத்திலும் யாருக்கும் கொடுக்கப் படுவதை தர்மம் என்று சொல்ல முடியாது .இறந்தவர்களின் வலிக்கு எந்த விதத்திலும்குறைந்ததல்ல குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டால் அவர்களின் குடும்பத்தார்க்கும் கிடைக்கும் வலியும் வேதனைகளும். அதுவும் குற்றவாளிகளின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உள்ள சமூக இழிவுகளின் வலி பெரியது . கொளுத்திப் போட்டு மாணவிகளைக் கொன்றவன் மனம் வருந்தியிருப்பானா இப்போது , இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் இது மாதிரியான விசயத்தை பண்ணுவானா என்பதும் கேள்விக்குறியே ? அதில் சந்தேகம் என்றாலும் பெயிலில் வர முடியாத ஆயுள் தண்டனைப் போது மானது இல்லையா ? அப்படி செய்வதின் மூலம் அவன் தவறை அவன் எண்ணி வருந்த அவனுக்கொரு நீண்டஆயுளைக் கொடுப்பது சரியானதில்லையா ? சமூகத்தில் இந்த மாதிரியானக் குற்றங்களை தடுப்பதற்கு இது போல் செய்பவர்களுக்கு ஒரு பயம் வர செய்ய வாவது இது போல் ஒரு மரண தண்டனையை கொடுக்கவேண்டும் என்பதும்ஒரு வாதம் ,அரபு நாடுகளில் அதனால் தான் பொது இடத்தில் தண்டனையை கொடுக்கிறார்கள்ஒரு பயத்தை ஏற்படுத்த .

பயம் கொண்டு எல்லாக் குற்றத்தையும் தடுக்க முடியாது .அதுவும்இந்த விசயத்தில் கொளுத்தி கொலை செய்தவர்கள் மட்டுமா நடந்த சம்பவத்திற்கு காரணம் .நடந்த அரசியலில் தன் பலத்தைக் காட்ட இது மாதிரி செய்வதைப் பாரட்ட இருக்கும் அரசியல்தலைவர்கள் ஒரு காரணம் . ஒரு தலைவனின் பலம் என்பதே அவர்களின் தொண்டர்களால் நடத்த முடிகின்ற வன்முறையின் பலத்தைப் பொறுத்தது என்றிருக்கும் மனப் பான்மை காரணம்.

நம் வீட்டில் எரியாதக் கூரைக்காய் எதற்கு தண்ணீர் விட வேண்டும் என்று டிவி பார்த்துக் கொண்டுவெறும் உச் கொட்டும் நம் சுயநலம் ஒரு காரணம் , இந்த குற்றவாளிகள் யாரும் வானத்தில்வந்து குத்திது விட வில்லை நம்மில் ஒருவரே ..ஒரு விதத்தில் அவர்களும் விக்டிம்களே .ஞாபகம் இருக்கட்டும் இந்த எரிப்பு நடந்து அடுத்து வந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர் யார் ? அதன் பின் நடந்த சாட்சிகளின் பல்டிகள் , தொலைந்து போன அரசு ரெக்காடுகள் என்று நடந்த பல கூத்துக்களை மெளனசாட்சிகளாய் தானே பார்த்துக் கொண்டிருந்தோம் .இப்படிப் பட்ட அரசியல் விசயங்களை பார்த்தும் வளர்ந்தும் வருகின்ற ஒரு அரசியல் ஆசையுள்ள முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு என்ன வழி ,காட்டுகின்றவழி எப்படியாவது தலைவனை காக்கா பிடிப்பது , அதற்கு யார் தாலியை அறுத்தாலும் பரவாயில்லை என்பது தானே ? அரசியலில் இதை விட முன்னேறுவதற்கான ஒரு பாதையை நீங்கள் காட்ட முடியுமா ? சாதிக்கும் சில சில்லறைக் கோவங்களுக்கும் ,கவர்ச்சி பேச்சுகளுக்கும் உங்கள் உரிமையை ஓட்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒத்த சமூக அக்கறை தானே கொலை செய்தகுற்றவாளிக்கும் இருக்கும் . அவன் ஒரு மந்திரியாவதற்கான வாய்ப்பை இழந்து இன்று தூக்கு மரத்திற்காய் காத்திருக்கிறதிற்கு காரணம் ,

ஒன்று கொலை செய்வதை மாட்டிக் கொள்ளாமல் செய்யத் தெரியாதது.

இரண்டு முட்டாள் மக்களை சரியா தெரிந்து கொள்ளாதது ? பல சமயம் முட்டாள் தன் இயலாமையை மறைக்க மாட்டுபவர்களை தண்டிப்பது ?
நிறைய இடங்களில் புருசன் பொண்டாட்டி மேல் வீரம்காட்டுவதை போன்றது .

அப்சலானாலும் /நளினியானாலும் /நெடுஞ்செழியனுக்கோ சட்டம் தூக்குத் தண்டனை கொடுப்பதைஎதிர்க்கத் தான் வேண்டும் ,கொலை என்பது யார் செய்தாலும் தவறே அதை அரசாங்கம் மக்கள்ஆதரவில் கொல்வதை நியாமாக பார்ப்பது மனிதத்தின் தத்துவத்தை புரியாயதே .இது எந்த விதத்திலும்இற்ந்து போனவர்களுக்கு செய்யும் அகெளரவமாக கருதவில்லை.அவர்கள் ஆத்மா சாந்தி அடையாது என்றும் சொல்வதற்கில்லை ,உயிர் விடுவதின் வலி என்பதை தெரிந்தவர்கள் அவர்களின் ஆத்மாக்கள்.

காலம் எல்லோருடைய வலியையும் சரி பண்ணும் என்ற நம்பிக்கையில் மன்னிப்போம் .

Labels: ,

இஸ்டாரு நானு

இந்த வாரம் நான் தாம்பா இஸ்டாரு ..இஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்து இப்படி ஒரு வாய்ப்பை நமக்கு எவனும் தந்ததில்லை ( ஏன்னா எல்லாருக்கும் என்னைப் பத்தி தெரியும் )

தமிழு மணம் நிருவாகிகளுக்கு டேங்க்ஸ் சொல்லுறது ஒரு மருவாதின்னு பப்ளிக்கெல்லாம் பீல் பண்ணதாலே இந்தப் பதிவு .

தேங்க்ஸ்ப்பா

நான் ஒண்ணும் பெரிதாய் பதிவுகள் போடுபவன் ஒன்றும் இல்லை, சமயம் கிடைக்கும் போது அப்ப அப்ப எதையாவது எழுதுவேன் .

படித்தலில் எனக்கான ஆர்வம் அதிகம் எழுதுவதை விட வாசித்தலே எனக்கு உவப்பாயிருக்கிறது. பிடிக்காத எழுத்துத்தாளர்கள் என்று ஒருவரும் இல்லை, அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்ப்பு ஒன்றும் இல்லை . இணயத்திலும் நிறையவே படிக்கிறேன் தமிழ் மணத்தில் சிலரது எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் , சிலரின் கருத்துக்களின் மேல் எனக்குத் தீவிர விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களின் கருத்துக்களில் ஒத்துக்கொள்ளும் கருத்துக்கள் இருந்துள்ளதை பார்த்திருப்பதால் யாரும் ஸ்டீரியோ டைப் என்று முத்திரையிட்டு ஒதுக்குவதிலோ கொண்டாடுவதிலோ அர்த்தமில்லை ?

நம் தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்தவர் பலர். பின்னூட்டங்கள் அதிகம் இடுவதில்லை எனினும் படிக்கிறேன். நல்லப் பல ஆக்கங்களும்
சிந்தனைகளுக்கும் தளமாய் இருக்கும் பிளாக்கர் மற்றும் தமிழ்மணச் சேவை முக்கியமானதே.

செரி இன்னா எளுதி கிளிச்சிட்டேன்னு இஸ்டாராயிட்டேன்னு கேக்குற மனசாட்சிக்கு பயப்பட போறதில்லை..என்னா அதை தமிழ்மண நிர்வாகிக்கு பார்வேட் பண்னிட்டேன் ..

என்ன எழுதி படுத்தப் போறான்னு கேக்குறீங்களா ? எனக்கேத் தெரியாது

ஓரளவு எழுத முயற்சிக்கிறேன் ..உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்

Labels: