கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

அமெரிக்க அடிவருடி

அமெரிக்கா என்பது இந்தியாவின் அறிவு ஜீவி வட்டத்தில் ஒரு ஏதேச்சாதிகார மையமாகவும் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் கொலைசெய்யும் ஒரு நாடாகவே இருந்து வந்தது ,அதில் பேரளவு உண்மை இருந்தாலும் அமெரிக்காவின் மறுபக்கமான ஜனநாயகம், திறமைகாரர்களை எங்கு இருந்தாலும் அமெரிக்கா வர ஊக்குவிக்கும் அரசும் , கனிவான மக்களும் உள்ள ஒரு நாட்டையும் காட்டத் தவறியது.

ஆனால் சோவியத்தின் நிறைகளை மட்டுமே பார்த்து குறைகளை பார்க்க மறுத்த ஒருப்பார்வை இடது சாரி சார்ந்த பார்வையாளர்களால் உருவாக்கப் பட்டிருந்தது.

இந்தப் பாரபட்ச பார்வை பார்வை எல்லா தர மக்களிடமும் ஒரு விதத்தில் அமெரிக்க பற்றிய வெறுப்பை கொடுத்து வந்தது சமீபத்திய காலம் வரை நடந்து வந்ததொரு யாதார்த்தம் .கேரள சேட்டன்மார்கள் பருவ மழை வரவில்லா விட்டாலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் சதி செய்து விட்டதாக பேசுவார்கள் . சோவியத் ரஷ்யா நமக்கு நண்பர்களாகவே அடையாளம் காட்டப் பட்டோம் , சாதாரண மக்களிடத்திலும் கூட ரஷ்யா பாசம் இருந்ததிற்கு காரணம் அன்றைய பலத் தலைவர்கள்சோவியத் ரசிகர்களாக இருந்ததும் ஒரு காரணம் .ஏகாதிபத்தியம் என்பது ஏதோ அமெரிக்கா மட்டும் பண்ணுகிற விசயம் போல் பேசும் இவர்கள் சோவியத் நடத்திய நாடு பிடிக்கும் அநியாயங்களின் மேல் ஒரு விமர்சனத்தையும் சொல்வதில்லை . இன்னமும் கூட சோவியத் விசயத்தை விமர்சனம் செய்தால் நல்லதொரு அர்ச்சனை கிடைக்கும்.

சோவியத் நமக்கு பல இக்கட்டான விசயங்களில் உதவியிருக்கிறது , அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து சில பல நமக்கெதிராய் செய்து உள்ளது , அதை நான் இல்லை என்று சொல்ல நான் முட்டாள் ஒன்றும் இல்லை.

ஆனால் இன்றைய மாறி வரும் உலகச் சூழலில் நடு நிலைப் பார்வையில் சோவியத்தின் தவறுகளையும் ,அமெரிக்காவின் வெற்றிக்கானக் காரணங்களையும் நாம் பார்க்கத் தவறினால் அது ஒருவருடைய புரிதலின் குறைபாடே அன்றி வேறல்ல , இது அமெரிக்க அதரவு /சோவியத் எதிர்ப்பு என கண் மூடித் தனமாய் பேசுபவர்களுக்கும் பொருந்தும் .

இன்றையக் காலச்சூழலில் அமெரிக்கா என்பது தேவைப்படுகின்ற ஒரு ரவுடி. அமெரிக்க உணர்வுகளைப் பொறுத்தே இன்றைய உலகத்தின் எல்லா நாட்டு அரசியலும் நடக்குகிறது ,வரும் காலங்களில் அதன் பலம் சைனா , ஐரோப்பா ,இந்தியா வளர்ச்சிகளால் ஒரளவுக்கு மாறலாம் என்றும் கூட இது தான் நிதர்சனம் இன்று.அமெரிக்கா அடாவடியாக செய்யும் பல காரியங்கள் அமெரிக்கர்களிலேயே பாதி பேருக்கு ஒப்புமை கிடையாது .

அமெரிக்காவில் நான் அறிந்த வரையில் கற்றுக் கொள்ள வேண்டியது அதன் தனி மனித சுதந்திரம் பற்றிய கொள்கை மற்றும் Dynamic ஜனநாயகம் . ஜனநாயகம் அருமையாக இங்கு வேலை செய்கிறது . யாரோ இணையத்தில் புளோரிடா விவகாரத்தை மட்டும் சொல்லி அமெரிக்காவின் ஜனநாயகம் கேலிக் கூத்து என்று கருத்துத் தெரிவித்திருந்ததைப் படித்த போது சிரிப்பு தான் வந்தது.

அமெரிக்காவில் ஷெரிப்பில் இருந்து பப்ளிக் அட்டெர்னி வரைக்கும் தேர்ந்தடுக்கப் படுபவர்கள் தான் .சும்மா உடன் பிறப்புகளுக்கும் , ஜால்ராக்களுக்கும் கொடுக்கும் பதுவி அல்ல .அதனால் தான் அவர்கள் தங்களை தேர்ந்த எடுக்கப் பட்டவர்களின் மன நிலையை புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,சான் ப்ரான்ஸ்கோவில் அல்ரா லிபரலும் ,டெக்சாசில் இவாஞ்சுவலிஸ்டும் பதவியில் வருகிறார்கள்.மக்களின் மனோ நிலையை பிரதிபலிக்கும் ஒரு தலைமை ,அது தானே சரியான ஜனநாயகம்.


அது மட்டுமல்ல அருமையான பெடரல் அமைப்பு அது .மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அதிகமே , நிறைய விசயங்கள் மத்தியஅரசு தலையிட முடியாது .அது போல் சிட்டிக்களுக்கும் ( நம்ம பஞ்சாயத்து போல்) அவர்களுக்கான பட்ஜெட்டுகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப் படுவது போல் அருமையான விசயம் எதுவும் இல்லை . நாம் செலுத்தும் வரி எப்படி செலவழிக்கப் படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொருவனுக்கும் உரிமை இருக்கிறது . வீட்டில் இருந்த படியே இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் .

தொழிலாளர் உரிமைகள் கண்டிப்பாய் நம்ம ஊர்களை விட அதிகமே .ஸ்டிரைக் பண்ணுவது மட்டும் தான் தொழிலாளர் உரிமையா என்ன ,அது கூடப் பண்ணலாம் அதற்காக பொதுச் சொத்தையோ ,தனியார் சொத்தையோ சேதப் படுத்த முடியாது.

கோர்டில் பொய் சொல்வது தான் பெரிய குற்றம் ,நம்ம ஊரில் எங் கையெழுத்து இல்லை என முதலமைச்சரே சொல்லலாம் .கோர்டும் சும்மா இருக்கும் .கிளிண்டன் விவகாரத்தில் அவர் பொய் சொன்னது தான் அவரை நாற அடித்தது .

இன்றைக்கு இராக் விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு குரல் வந்தது இங்கிருத்தும் தான். நைஜர் விவகாரத்தில் ஜனாதிபதி சொன்னது தவறு என்று சொல்ல வைக்க இங்குள்ளவர்களால் முடிந்தது. காங்கிரசில் ஈராக்குக்கு அதிகம் காசு கொடுக்க முடியாது என்று ஆப்பு வைக்க முடிந்தது , ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவர் அதிகாரத்தை தவறாய் பயப் படுத்தினால் இப்படி அடுத்த எலெக்ஸனில் தான் காட்ட முடியும் .அமெரிக்கா செய்ததற்கு வக்காலத்து வாங்கும் முயற்சில்லை என் பதிவு .

என்னுடைய எண்ணம் என்ன வென்றால் ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .அல்குவைதா டிரேட் சென்ரர் தாக்குதல் நடக்காதிருந்தால் புஷ் ஈராக் மேல் படையெடுக்க காங்கிரஸ் /செனட்டில் இருந்து பெற்றிருக்கவே முடியாது . தங்களின் மேல் குண்டு விழக் காரணம் ஈராக் தான் என்று சொல்லப் படும் போது எந்த மனிதன் தான் சும்மா இருப்பான் , அதனால் தான் மக்களின் ஆதரவும் செனட்டர்களின் ஆதரவும் இருந்தது . சொன்னது எல்லாம் தவறு என்று தெரிந்தது என்றதும் மக்கள் ஆதரவு குறைந்தது தேர்தலில் சரியான அடி வாங்கினார்கள் . இது ஒரு ஜனநாயக நிகழ்வா இல்லையா . சோவியத்தில் இன்னமும் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியவில்லை . புடின் புஷ் யை விட மோசமாய் தான் நட்ந்து கொள்கிறார்.சைனா நடத்தும் அநியாங்களை கேட்கவே ஆளில்லை.

ஆனால் இன்றையச் சூழலில் அமெரிக்க எதிர்ப்பு பாலஸ்தீனிய பிரச்சினையை மையம் கொண்டே உள்ளது , இராக் விவகாரத்தில் அமெரிக்காவின் மேல் தார்மீகக் கோவம் உலகத்தில் முஸ்லீம்களுக்கு இருக்கிறது.

ஆனால் இணைய இஸ்லாம் நண்பர்கள் இஸ்லாம் நாடுகளில் இருக்கும் எல்லா விசயங்களும் பாலஸ்தீனிய பிரச்சினை யை மட்டுமே மையமாகப் பார்க்கிறார்கள். அமெரிக்காவை மட்டும் அனல் கக்கும் விழியுடன் விசம் கக்கும் அவர்கள். அவர்களே ஆதர்ச நாடுகளான சவுதி அரேபியாவும் ஜோர்டனும் அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருப்பதைப் பற்றி எந்த விமர்சனமும் நான் இணையத்தில் பார்த்ததே இல்லை. நியாயமாய் அவர்களைத் தானே இவர்கள் திட்ட வேண்டும். அமெரிக்கா மற்ற நாடுகள் விசயத்தில் எப்படி யிருந்தாலும் அவர்களின் சொந்த மக்களை சந்தோசமாய் தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த இஸ்லாமிய நாடுகளின் மக்கள்எவ்வுளவு சந்தோசமாய் இருக்கிறார்கள். நம்முடைய பாகிஸ்தான் நண்பர்களில் எல்லா பணம் உள்ள நண்பர்கள் எல்லாரும் அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறதற்குக் காரணம் என்ன ? எல்லோரும் அமெரிக்க வாழ்க்கையை விரும்பினாலும்டெஸ்பரேட்டாக இருப்பது யார் ?
எல்லா விசயங்களிலும் சும்மா அமெரிக்காவை மட்டுமே குறை சொல்லாதீர்கள் .

அமெரிக்கா செய்வதற்கெல்லாம் வக்காலத்துவாங்கவில்லை நான் . நம் நாட்டில் உள்ள மக்களும் அரசியல் தலைவர்களும் ஒழுங்காய் இருந்தால் ஏன் அமெரிக்கா பிரச்சினை பண்ண முடிகிறது . ஒற்றைப் பார்வையில் எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்ல முயற்சிக்காதீர்கள் சன்னலை திறந்து கொஞ்சம் வெளியேயும் பாருங்கள்.

PS

தலைப்பு உதவி -கால்கரி சிவா. அவரிடம் இருந்து சுட்டது

Labels: ,

தேடலின் இயல்பு -1

மதம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் ,இறை குறித்த தேடல் தொடர்ந்து செய்தே வந்துள்ளேன். ஆன்மீக நாட்டம் அதிகம் ஆக ஆக மதம் குறித்த விமர்சனங்களும் அதிகம் ஆகியது . ஆன்மீக்ம் என்பது கோவிலுக்குச் செல்வதோ அல்லது அவரவர் மதங்களின் பழக்கப் படி கடமையை செய்வதோ அல்ல என்பது
புரிந்தது . கடவுள் மறுப்பு அவர் மேல் வைக்கப் படும் விமர்சனங்களும் கூட ஒரு வகையில் ஆன்மீகமே . மதம் பற்றி பல குற்றச்சாட்டுகள் எனக்கு இருந்தாலும் கோவிலுக்குப் போவது பிடிக்கும் அதற்காக தீபாவளி ,பொங்கல் நாட்களில் கண்டிப்பாய் போகே ஆகி கூட்டத்தில் இடிபட்டு இரண்டு பேரை மனதில் திட்டுவதற்கு கோவிலுக்கே போக வேண்டாம் . அதீத வேசம் கட்டும் பக்தியாளன் நான் இல்லை. ஆனால் இந்தியாவில் குறிப்பாய் தமிழ் நாட்டில் கோவில் பார்க்கவே இன்னுமும் ஆசை , சாமிகும்ப்பிடுவது என்ற சம்பிரதாயம் கடந்து புரிந்து கொள்ளவே கோவில் செல்வேன் . இங்கே அமெரிக்காவில் கோவில் செல்வது சம்பிரதாயம் மட்டுமே ,முன்னேல்லாம் சாப்பிடவே செல்வேன் .
இப்போது மனைவிக்காகவும் ,நண்பர்களுக்காகவும் .

ஆனால் தேடுதலை ஆன்மீக குருக்களை கவனித்தலையும் அவர்களின் கருத்துக்களை படிப்பதும் மூலமாக தொடர்ந்து வந்தேன். ஆனநத விகடனில் மனசே ரிலாக்ஸ் புகழ் சுகபோனந்தா வின் பகவத்கீதை லெக்சர்களுக்கும் ,இரண்டு தடவை அவரின் LIFE கோர்ஸ் போயிருக்கிறேன் .அவரின் பேச்சுத் திறமை எனக்குப் பிடிக்கும் .லைப் புரோகிராமில் தியானம் ,சில விளையாட்டுக்கள் , கலந்துரையாடல் ,நடனம் என்று ஒரே மிக்ஸ் யாய் இருக்கும் நன்றாகவே இருக்கும் . ஆனாலும் தீவிரமான ஒரு புரிதலும் ஏற்படவில்லை .அவர் பலவற்றை அறிவு பூர்வமாகவும் ,தர்க்க பூர்வமாகவும் விளக்க முயற்சி செய்த்தை நான் புத்த்கங்கள் வழியாகவே செய்து கொண்டிருந்தேன் . சுகபோனந்தா ஒரு அறிவு ஜிவியாகவும் ,வேதங்களையும் பல புத்தகங்களை நன்கு படித்த தர்க்க ரீதியான ஒரு சாமியாராகத் தான் பார்த்தேன். இருந்தாலும் இன்னமும் அவரின் பேச்சுக்களை கேட்கப் பிடிக்கும் ,அவர் இங்கு வந்தால் அவரின் பகவத் கீதா லெக்சர்களுக்கு போய் வர முயற்சிப்பேன்.

ஐந்து வருடங்களுக்கு முன் கோயம்பத்தூரில் கோவைக் குற்றாலம் சென்று வரும் வழியில் கார் ஓட்டுனர் வெள்ளியங்கரி மலையில் உள்ள தியான மண்டபம் பற்றி சொல்லியதால் அங்கு சென்று வந்தேன் .தியான லிங்கத்தின் சுற்றியிருக்கும் ஒரு தியான அறையில் இருந்து தியானம் செய்ய முயற்சி செய்த போது ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது ,ஆனால் என்னுடன் வந்திருந்த அம்மா,அப்பா அக்கா ஆகியோரை அதிகம் நேரம் காக்க வைக்க விரும்பாமல் சில புத்த்கங்கள் மட்டும் வாங்கி விட்டு திரும்பி விட்டேன் .புத்தகங்களை படித்த போது ஜக்கி மேல் ஒரு பிரியம் உண்டானது .அவரின் பல பதில்கள் சுகர் கோட் இல்லாமல் தெளிவாக இருக்கும் .அவர் பக்தி பற்றி சொல்லிய கதைகள் சிந்திக்க வைத்தது. அவரும் தியான வகுப்புகள் நடத்துகிறார் என்று நண்பர்கள் சொல்லித் தெரியும் . ஜக்கி ஒரு குருவுக்கான எல்லாத் தகுதியும் உள்ளவர் என்பது என் எண்ணம் . அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் எனக்குத் தெரியும் ,ஆன்மீகப்பாதையில் உள்ளவர்கள் மேல் நம் மதிப்பீடுகளை சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீக ரீதியாக ம்ட்டுமே வைக்க வேண்டும் . விருப்பம் இல்லாமல் அவர் யாரையும் சாமியாரக்க முடியாது .

என் நண்பரின் வழியாக நித்யானந்த சுவாமிகளின் லெக்சர் கேட்டிருக்கிறேன் ,அவர் அருமையாக பல விசயங்களில் பேசியிருக்கிறார் .அவரும் சீரியசான சில தியான கோர்ஸ்கள் நடத்துகிறார்.என் நண்பரின் அனுபவம் நன்றாகவே இருந்ததாகவே சொன்னார்.சிறிய வயதில் அவர் பல விசயங்களைப் பற்றி நன்றாகவேப் பேசுகிறார்.ஆனாலும் என் பகுத்தறிவு மயக்கம் அவ்வுளவு எளிதாய் எல்லோரையும் நம்ப மறுக்கிறது .நித்யானந்தரிடம் நானும் எனர்ஜி தரிசனம் வாங்கி இருக்கிறேன் ,ஒரு மாதிர்யாக இருந்தது ,கொஞ்ச நேரம் போதையாக அவ்வுளவு தான் .விபாசனா தியானம் பண்ணிக் கொண்டு இருந்ததால் குழப்ப வேண்டாம் என்று இவரின் தியானத்திற்கு நான் செல்ல வில்லை .

அம்மா என்கின்ற அமிர்தானந்த மையி ,இவர்கள் போட்டோ எங்கள் வீட்டில் 90களின் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது ,என் தாத்தா பாட்டி இவர்களை கேரளாவில் சந்தித்து பக்தர்களாகி விட்டிருந்தனர். அப்போதல்லாம் நான் இவரை
அதிகமாய் கிண்டலடித்து கொண்டு ஆச்சியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பேன். அதன் பிறகு அம்மா தமிழ் நாட்டிலும் பாப்புலர் ஆகி வந்ததை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அவ்வுளவாக அக்கறை காட்டவில்லை .எனக்கு அவரின் பகதர்கள் அம்மாவின் மேல் வைத்திர்க்கும் பக்தியை நான் அவ்வுளவாக ரசிக்க வில்லை ,அது ஆன்மீகம் அல்ல என்பது அப்போதைய நிலைப்பாடு .
அதன் பிறகு விபாசான சென்றிருந்த போது யோசிமெட்டியில் இருக்கும் ஒரு யோகா ஆசிரியர் (வெள்ளைக்காரர் தான்) அம்மாவைப் பற்றி புகழ்ந்த படி இருந்தார். அம்மாவைப் பார்க்க அவரும் அவர் நண்பர்களும் தொடர்ந்து 3 நாட்களாய் 200 மைல் வண்டி ஓட்டி வந்திருந்தார்களாம் . அப்படி அவர் சொன்ன போது அப்படி என்ன இருக்கிறது என்று தோண அந்த வருடம் அம்மா இங்கு வந்த போது போயிருந்தேன் . ஓ அது ஒரு பக்தி கல்டின் பெரும் கூட்டம் ,பெரும்பாலும் அமெரிக்கர்களை மட்டுமே நான் பார்த்தேன் ,இந்தியர்கள் குறைவு தான். கண்ணீரில பஜன் செய்யும் கூட்டத்தையும் ,அம்மாவை கட்டிப்பிடித்து பீறிடும் அழுகையை அடக்கி கொண்டு வரும் நபர்களைப் பார்க்கும் பொழுது எனக்குக் கொஞ்சம் பயமாய் தான் இருந்தது. அந்த பஜன் கூட்டத்தில் நாங்களும் சேர்ந்து இருந்த போது உணர்ச்சிகள் கொந்தளிப்பதை தாங்க முடியாமல் நான் எந்திருத்து வெளியே வந்து மற்றவர்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.பல கதைகள் பலர் என்கிருந்தோ வந்து 10 நாட்கள் அம்மாவைப் பார்க்கவே என்று வந்து அருகாமை ஹோட்டல்களில் தங்கி இருக்கிறார்கள் ,பலர் Mid west ,Canada இல் இருந்தும் சிலர் Europe இல் இருந்தும் வந்து தங்கிருந்ததைப் பார்த்து எதற்காக இப்படி என்று தோன்றியது ,இது ஒருவித கல்டோ என்ற தயக்கம் கூட இருந்தது ( என் புத்தி அப்படி ) .ஆனால் சிலரையும் அவர்கள் அம்மாவிம் மேல் வைத்திருந்த நம்ப்பிக்கையும் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையின் துவளும் சமயம் இந்த நம்பிக்கைகள் அவர்களை காப்பாற்றியதாக சொல்வதை கேட்ட போது ..கல்டாக இருந்தாலும் என்ன நல்லதே என்று தோன்றியது . அம்மா வந்திருக்கும் எல்லோரையும் அணைப்பார் வந்திருக்கும் எல்லோரையும் அது பலருக்கு வெடித்து கிளமபும் உணர்ச்சியின் அழுகைகளாக இருந்தது ஆச்சிரியம் . எனக்கு நிஜமாய் பயமாய் இருந்தது அழுது விடுவோமோ என்று .அப்படித் தான் இருந்தது எப்படியோ கட்டுப் படுத்திக் கொண்டு வந்துவிட்டேன் ( புத்தியின் சாரம் அப்படி ஆன்மீகமும் புத்தியும் நேரதிர் , நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி )
இதை எழுதும் போது கூட அந்த நாளின் உணர்ச்சிகள் சிலிர்க்க வைக்கிறது.

சரணடைதல் என்ற உயரியத் தத்துவமே எல்லா பக்தி சார்ந்த மதங்களுக்கும் காரணம் ,இந்திய மதங்களின் பிரதானமே அது தான் . இராம கிருஷ்ண பரமகம்ஷரின் அடிப்படையே அது தான் . ஆனால் என்னைப் போன்றவர்கள் புத்தி அவ்வுளவு எளிதில் அதை செய்ய விடுவதில்லை . பெரும்பாலானோர் அப்படித் தான் , நான் கொஞ்சம் மோசம் ,என்னை விட மோசமானவர்களையும் பார்த்து இருக்கிறேன் , சூப்பர் ஈகோ உள்ளவர்கள் தேடுவது வேறொன்றை பக்தியை அல்ல .சரணடையத் தெரிந்தவர்களுக்கு எந்த மதமாயினும் பிரச்சினையில்லை இல்லாதவர்கள் தான் என் மதம் ,என் வழி ,என் குரு என்று சண்டை இட்டுக் கொண்டு இருப்போம் . எனக்கும் புரிந்தது நான் தேடுவது வேறு எதையோ என்று ,அல்லது சரணடைய இன்னமும் பக்குவப் படவில்லை என்று .

தேடலின் தேவையே நம்மப் பற்றிப் புரிந்து கொள்ளத் தான் ,என் மற்ற அனுபவங்களையும் பிடித்த படித்த ஆன்மீக குருக்களைப் பற்றி அடுத்தப் பதிவில் எழுதுகிறேன் .

Labels: ,

இழப்பின் வலிக்கான மருந்தென்ன ?

பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறந்து தான் தீர வேண்டும் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் சாவை எதிர் கொள்ள பயம் நம் எல்லோருக்கும் .அதிலும் நம்அன்புக்குப் பாத்திரமானவர்களின் மரணம் நம்மை உணர்ச்சிமயமாக்கும் , பெரும்பாலும் நம்மால் இறந்தவர் நம் மேல் வைத்திருந்த அன்பும் நாம் அவர் மேல் வைத்திருந்த அன்பே அவர்களின் இழப்பிற்காக நாம் அழுவதற்கான பெரும் காரணம் .

எங்கள் ஊரில் பெரியவர்கள் சொல்லுவார்கள்பிள்ளை தலை மேல் ஏறி போக வேணும் அதுவே சந்தோசம்ன்னு ,எனக்கு சின்ன வயசில் புரிந்ததில்லை. ஆனால் இப்போது யோசிக்கும் போது பெரியவர்/பெற்றோர் இருக்க பிள்ளைகளை அவர்கள் இழப்பது பெரும் கொடுமை அது அவர்களை எவ்வுளவு பாதிக்கும் என்பதை. அதிலும் சாவு துர்மரணமாய் சம்பவிக்கும் போது வரும் வலி ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. சுனாமி போன்ற பேரிழப்புகளில் பிள்ளைகளை இழந்தவர்களின் வலியை நம்மால் உணரவே முடியாது . சுனாமி போன்ற இயற்கை அழிவிற்கு விதி என்று பெயரிட்டாவது நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் , ஆனால் ஏழு வருடங்களுக்கு முன் ஜெ தண்டனைக்கு எதிர்ப்பு என்றுசொல்லி எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளின் இழப்பை அவர்கள் பெற்றோர் தாண்டி வருவது மிகக் கடினம் . அவர்களின் பெற்றோரில் ஒரு அம்மாவுக்கு மன நோய் வந்து விட்டது என்றும் மற்றொருவர் அடிக்கடி தன்னையே சுட்டுக் கொள்கிறார் என்பதை வார இதழ்களில் படிக்கும் போது அவர்களின் வலி நமக்குத் தெரிகிறது. அதுவும் செய்திகள் என்றப் பெயரில் நீயூஸ் சேனல்களின் விசுவல் வன்முறை கொஞ்சம் அதிகம் ,சம்மந்தப் பட்டவர்கள் அதனைப் பார்ப்பவர்களுக்கு எவ்வுளவு வலி இருக்கும் என்பது செய்தி உடகங்களுக்கு புரியா விட்டாலும் நமக்குப் புரியும் . இந்த இழப்பு சாதாரணமானது அல்ல ,எதோ விதி என்று சொல்ல நோயில் யாரும் இறக்கவில்லை போர் சூழலிலும் இல்லை ,தனிப் பட்ட கோவமோ ,விபத்தோ இல்லை . யாரோ சில முட்டாளின்அரசியல் ஆசையால் வந்த வினை.

இழப்பின் வலியைக் எந்த ஒரு தீர்ப்பும் கொடுக்க முடியாதுஎன்றாலும் கொலைகளுக்கு ஒரு நீதி கிடைத்தால் அது அவர்களுக்கு ஒரு சமாதானத்தைக் கொடுக்கும். வந்திருக்கிற நீதி 3 பேர்க்கு மரணத்தையும் மற்றோருக்கு சிறையையும் விதித்திருக்கிறது . கொலைசெய்தவனுக்கு மரணம் என்பதே சரி என்று எல்லோருடைய வாதமும் .நீதிபதி Rarest of the Rare கேசுகளில் இதுவும் ஒன்று என்கிறார். ஆனாலும் தூக்குத் தண்டனை எந்த விதத்திலும் யாருக்கும் கொடுக்கப் படுவதை தர்மம் என்று சொல்ல முடியாது .இறந்தவர்களின் வலிக்கு எந்த விதத்திலும்குறைந்ததல்ல குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டால் அவர்களின் குடும்பத்தார்க்கும் கிடைக்கும் வலியும் வேதனைகளும். அதுவும் குற்றவாளிகளின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உள்ள சமூக இழிவுகளின் வலி பெரியது . கொளுத்திப் போட்டு மாணவிகளைக் கொன்றவன் மனம் வருந்தியிருப்பானா இப்போது , இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் இது மாதிரியான விசயத்தை பண்ணுவானா என்பதும் கேள்விக்குறியே ? அதில் சந்தேகம் என்றாலும் பெயிலில் வர முடியாத ஆயுள் தண்டனைப் போது மானது இல்லையா ? அப்படி செய்வதின் மூலம் அவன் தவறை அவன் எண்ணி வருந்த அவனுக்கொரு நீண்டஆயுளைக் கொடுப்பது சரியானதில்லையா ? சமூகத்தில் இந்த மாதிரியானக் குற்றங்களை தடுப்பதற்கு இது போல் செய்பவர்களுக்கு ஒரு பயம் வர செய்ய வாவது இது போல் ஒரு மரண தண்டனையை கொடுக்கவேண்டும் என்பதும்ஒரு வாதம் ,அரபு நாடுகளில் அதனால் தான் பொது இடத்தில் தண்டனையை கொடுக்கிறார்கள்ஒரு பயத்தை ஏற்படுத்த .

பயம் கொண்டு எல்லாக் குற்றத்தையும் தடுக்க முடியாது .அதுவும்இந்த விசயத்தில் கொளுத்தி கொலை செய்தவர்கள் மட்டுமா நடந்த சம்பவத்திற்கு காரணம் .நடந்த அரசியலில் தன் பலத்தைக் காட்ட இது மாதிரி செய்வதைப் பாரட்ட இருக்கும் அரசியல்தலைவர்கள் ஒரு காரணம் . ஒரு தலைவனின் பலம் என்பதே அவர்களின் தொண்டர்களால் நடத்த முடிகின்ற வன்முறையின் பலத்தைப் பொறுத்தது என்றிருக்கும் மனப் பான்மை காரணம்.

நம் வீட்டில் எரியாதக் கூரைக்காய் எதற்கு தண்ணீர் விட வேண்டும் என்று டிவி பார்த்துக் கொண்டுவெறும் உச் கொட்டும் நம் சுயநலம் ஒரு காரணம் , இந்த குற்றவாளிகள் யாரும் வானத்தில்வந்து குத்திது விட வில்லை நம்மில் ஒருவரே ..ஒரு விதத்தில் அவர்களும் விக்டிம்களே .ஞாபகம் இருக்கட்டும் இந்த எரிப்பு நடந்து அடுத்து வந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர் யார் ? அதன் பின் நடந்த சாட்சிகளின் பல்டிகள் , தொலைந்து போன அரசு ரெக்காடுகள் என்று நடந்த பல கூத்துக்களை மெளனசாட்சிகளாய் தானே பார்த்துக் கொண்டிருந்தோம் .இப்படிப் பட்ட அரசியல் விசயங்களை பார்த்தும் வளர்ந்தும் வருகின்ற ஒரு அரசியல் ஆசையுள்ள முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு என்ன வழி ,காட்டுகின்றவழி எப்படியாவது தலைவனை காக்கா பிடிப்பது , அதற்கு யார் தாலியை அறுத்தாலும் பரவாயில்லை என்பது தானே ? அரசியலில் இதை விட முன்னேறுவதற்கான ஒரு பாதையை நீங்கள் காட்ட முடியுமா ? சாதிக்கும் சில சில்லறைக் கோவங்களுக்கும் ,கவர்ச்சி பேச்சுகளுக்கும் உங்கள் உரிமையை ஓட்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒத்த சமூக அக்கறை தானே கொலை செய்தகுற்றவாளிக்கும் இருக்கும் . அவன் ஒரு மந்திரியாவதற்கான வாய்ப்பை இழந்து இன்று தூக்கு மரத்திற்காய் காத்திருக்கிறதிற்கு காரணம் ,

ஒன்று கொலை செய்வதை மாட்டிக் கொள்ளாமல் செய்யத் தெரியாதது.

இரண்டு முட்டாள் மக்களை சரியா தெரிந்து கொள்ளாதது ? பல சமயம் முட்டாள் தன் இயலாமையை மறைக்க மாட்டுபவர்களை தண்டிப்பது ?
நிறைய இடங்களில் புருசன் பொண்டாட்டி மேல் வீரம்காட்டுவதை போன்றது .

அப்சலானாலும் /நளினியானாலும் /நெடுஞ்செழியனுக்கோ சட்டம் தூக்குத் தண்டனை கொடுப்பதைஎதிர்க்கத் தான் வேண்டும் ,கொலை என்பது யார் செய்தாலும் தவறே அதை அரசாங்கம் மக்கள்ஆதரவில் கொல்வதை நியாமாக பார்ப்பது மனிதத்தின் தத்துவத்தை புரியாயதே .இது எந்த விதத்திலும்இற்ந்து போனவர்களுக்கு செய்யும் அகெளரவமாக கருதவில்லை.அவர்கள் ஆத்மா சாந்தி அடையாது என்றும் சொல்வதற்கில்லை ,உயிர் விடுவதின் வலி என்பதை தெரிந்தவர்கள் அவர்களின் ஆத்மாக்கள்.

காலம் எல்லோருடைய வலியையும் சரி பண்ணும் என்ற நம்பிக்கையில் மன்னிப்போம் .

Labels: ,

சாதியும் நாமும்

தமிழ் நாட்டில் எல்லா சாதி பற்றிய வாதங்களிலும் ஒரு ஒற்றை வார்த்தை கண்டிப்பாய்யிருக்கும் அது பாப்பான் ..சாதிப் பெயர் சொல்லித் திட்டுவது அநாகரியம் என்பதை பெரும்பான்மயோர் ஒத்துக் கொண்டாலும் பிராமணர்களை "பாப்பான்" என்றும் முஸ்லீம்களை துலுக்கன் என்று சொல்வதற்கு படித்தவர்கள் கூட கூச்சப் படுவதில்லை .நம் தமிழ் மணத்தில் கூட இது மாதிரி திட்டுவது அநாகரிகம் படித்தவர்கள் அறிவு ஜீவிகளாக தம்மைச் சொல்லிக்கொள்ளும் ஒருக் கூட்டத்தின் உள்முகம்..

நம் சாதிப் பிரிவினகளுக்கு பிராமணர்கள் மட்டுமா காரணம் ..மனு மீது பழி போட்டு கொண்டே எத்தனை நாட்களுக்கு இருப்பது ...மனுவைத் தூக்கி கடாசி விட்டு போய்க் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு சிலரை மட்டுமே குறை சொல்லிக் கொண்டு வந்தேறிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பது நாம் நம்முடையக் குறைகளுக்கு அடுத்தவரைக் காரணம் சொல்வது போல் தான்.

பலருக்கு தன் சாதிப் புகழை சரித்திரத்தில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.வெட்கமாயிருக்கிறது திண்ணயில் நடந்த சண்டையைப் பார்த்து .

நாம் எல்லோரும் ஒருக் கேள்வியை நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டும் ,நம்முடைய முன்னோர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பதற்கோ அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதற்கோ யாருடைய உழைப்பத் திருடாமல் இருந்திருப்பார்களா ..எல்லா ஆதிக்க சாதிகளும் கீழ்ச் சாதிகளை சுரண்டியவர்கள் தான் .சரண்டியவர்களின் சந்ததியர்கள் தான் குலப் பெருமைத் தேடித் திரிகின்றனர்.


பாப்பம்பட்டி /கீரிப்பட்டி யில் நடப்பதையும் கண்டதேவிப் பிரச்சினைக்கும் பிராமணர்களை குறை சொல்லித் தப்பிக்க முடியாது..

சமீபத்தில் பசும் பொன் ரிசர்வ்டு தொகுதியாக ஆக்கப்பட்டதுப் பற்றி மக்கள் கொந்தளித்ததாக ஜீவி வெளியிட்டது ..எங்கேப் போய் கொண்டு இருக்கிறோம் நாம் ..இதற்கெல்லாம் மனு மீது பழி போட்டுத் தப்பி போகாதீர்கள் .இதைப் பற்றி பதிவு போட வேண்டும் என எண்ணியிருந்தேன் ..தமிழ் மணத்தில் யாரும் பேசுவாரே இல்லை

பிராமணர்க்ளுக்கும் அவர்கள் கொண்டுள்ள் சாதி அபிமானம் /வெறிக்கு நான் இங்கு வக்காலத்து வாங்கவில்லை ,நான் சொல்ல வருவது நம்மைப் போல் தான் அவாகளும் .சாதி பற்றிய பெருமிதம் இல்லாத எந்த so called உயர் சாதி என்று சொல்லுவோரும் ,பிற்படுத்தப் பட்ட சாதியினரும் இருப்பதாக என்க்குத் தெரியவில்லை.பிராமணர்களைத் திட்டுபவர்கள் தான் நம்மூரில் அதிகமாக இருக்க்கின்றனர் ஆனால் பிற சாதிப் பெருமைப் பேசுபவர்களை திட்டுவது என்பது குறைவு .

பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் தான் இங்கு அதிகம் ..ஆனா எல்லா இடத்திலும் ஆதிக்க சாதிகளின் ஆட்டம் அதிகம் தான் .ஊர்களில்ப் போய்ப் பாருங்கள் அவர்கள் வாயில் புழங்கும் வார்த்தைகளை (அம்பட்டன் ,வண்ணான் ,சக்கிலியன் ..)

சோபா சக்தி இலங்கையில் நடக்கும் வெள்ளாள சாதி வெறி பற்றி எழுதியும் பேசியும் வருகிறார் அவருக்கு நம்முடைய சாதி எதிர்பாளர்கள் எந்த வித ஆதரவையும் குடுப்பதாகத் தெரியவில்லை ,மாறாக அவர் குற்றம் சாட்டும் புலிகளுக்கு ஆதரவாகத் தான் நம் வீரமணிகளும் திருமாவளவனும் இருக்கிறார்கள். ஈழ்த்தில் பிராமண சாதி ஆதிக்கமேக் கிடையாது ,வெள்ளாள சாதி வெறிதான் அதிகம் ..நம் நண்பர்களுக்கு இதைப் பற்றித் தெரிந்தாலும் அமுக்கமாய்த் தான் இருப்பார்கள் .

ஆக நம் சாதி உயர்ந்தது ,சாதி பற்றி எழுதலாம் பேசலாம் பாப்பன்களைத் திட்டலாம் ,முஸ்லீம் நண்பர் இல்லா விட்டால் துலுக்கப் பசங்க மத வெறிண்ணு சொல்லலாம் ஆனா நம்ம சாதி உயர்ந்த சாதி எங்களுக்கெல்லாம் சாதி வெறின்னல்லாம் கிடையாது ..எல்லாத்துக்கும் அரசியல் வாதி தான் காரணம் ன்னு சொல்லி ஜல்லி அடிக்காதீங்க ..நம்ம எல்லாரும் ஒரு வகையில் சாதி வெறியர்கள் தான் ..மொதல்ல அதை ஒத்துக் கோங்க பின்னாலப் பேசலாம் புடலங்கா மனுவைப் பத்தி
தவறை ஒத்துக்கல்லையின்னா திருத்த முடியாது

Labels:

ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்

ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்

ராஜ்குமார் மறைவை ஒட்டி நடந்த வன்முறை உலக அளவில் கவனிக்கப் பட்டது.கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் CRON 4 செய்திகளில் சொல்லும் அளவுக்கு கவனிக்கப் பட்டது. அதற்கு காரணம் பெங்களூர் இப்ப எல்லாம் buzz word for VCs. startup கம்பெனியிலிரிருந்து கார்ப்பரேட் பெரும் தலைகள் வரை ஒரு தடவையாவது பெங்களூருக்கு போய் இருக்கிறார்கள்.பெங்களூர் இப்படி கெட்டப் பெயர் வாங்கியதில் பெங்களூரில் 2 வருடம் இருந்தவன் என்ற முறையிலும் இந்தியன் என்ற முறையிலும் வருத்தம் தான்.

ஆனால் இங்கு நான் எழுத விழைவது இந்தியர்களின் இதயங்களில் அடக்கி வைத்திருக்கும் வன்முறையைப் பற்றித்தான்.இந்த வன்முறையை கன்னடர்களின் வெறி என்று பிரச்சினையை குறுகிய வட்டத்தில் பார்ப்பது சரியில்லை.

இது மாதிரியான பிரச்சினைகளை இந்தியா பல வருடங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. இந்திராகாந்தி கொலையுண்ட போது நடந்த படுகொலைகளும் ,குஜராத் படுகொலைகளும் இன வெறி யென்று ஒதுக்கி விட்டாலும். எம்ஜி யார் மரணத்தின் போது சென்னையில் நடந்த வெறியாட்டத்தை எதை வைத்து வகைப்படுத்துவீர்கள். எம்ஜி யார் மேல் இருந்த அன்பு என்று சொல்ல முடியுமா என்ன ?


வன்முறை என்பது நம் வாழ்க்கையில் இணைந்த ஒன்று . வன்முறையை வீரம் என்று பார்ப்பவர்கள் இன்னமும் நம் சமூகத்தில் பெரும்பான்மையோராக இருக்கிறார்கள். அதுவே நம் திரைப்படங்களிலும் எதிரொலிக்கிறது . ஒரு அரசியல்வாதி கைதுச் செய்யப்பட்டாலே கடைகளை மூடச் சொல்லும் மூடத் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள். இது இந்தியா எங்கும் நடந்து கொண்டு இருக்கும் கூத்துதானே.இதில் கன்னடர் ,தமிழ், குஜராத்தி என்றெல்லாம் கிடையாது ,வாய்ப்பு கிடைத்தால்/சட்டத்தின் கையில் மாட்டாமல் இருப்போம் என்ற பயம் இல்லாமல் இருந்தால் பஸ்சில் கல்லை எடுத்து எறிவதை எந்த உறுத்தலும் இல்லாமல் செய்வார்கள். இந்த வன்முறையை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாது . அது நம் இரத்ததில் ஊறியது.விலங்கு உணர்ச்சியின் மிச்சம். வன்முறையை அடக்குவதற்கு ஆன்மீகம் உதவும்.ஆனால் ஆன்மீகத்தை வளர்க்க உதவி செய்ய வேண்டிய மதமோ வன்முறையைத் தூண்டுவது முரண்நகை.


இப்போது பெங்களூரில் நடந்த வெறியாட்டத்தை இப்படியும் பார்க்கலாம். பெங்களூரின் பெரும் வளர்ச்சி எல்லா பெங்களூர் மக்களை சென்று அடைந்துள்ளதா ? குறிப்பாக கன்னட நடுத்தர ஏழை மக்கள் பெங்களூர் வளர்ச்சியில் தாங்களும் ஒரு பகுதி என்று உணர்கிறார்களா ? இல்லை என்பதே உண்மை . அங்கேயே பிறந்து வளர்ந்த மக்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்குவது கனவில் கூட நடக்காதத் தூரத்தில் விலை கோடிகளில் இருப்பதும் வாடகை வீடு கூட பல ஆயிரங்களில் இருப்பதால் லோக்கல் மக்கள் ஒரு வெறுப்புடன் கீரிம் லேயரில் டிஸ்கோத்தே பார் என அலையும் மேல் தட்டு வர்க்கமாக் முயற்சிக்கும் சாப்ட்வேர் IT மக்களை ஒரு வெறுப்புடன் தான் பாக்கிறார்கள். அதிலும் அவர்கள் IT யில் பெரும்பான்மையோர் வேற்று மொழிப் பேசும் மக்களாக இருப்பதால் அவர்கள் கன்னட எழுச்சி என்ற பேரில் மற்றவர்களை வெளியே போக சொல்லுவது அதிகம் ஆயிருக்கிறது . அது இதுமாதிரியான் சமயங்களில் வெளிப்படுகிறது. தாங்கள் போக முடியாத கார்களை உடைக்கவும் தீ வைக்கச் சொல்லுகிறது. முடிந்தால் பிடிக்காதவர்களை நாலு சாத்து சாத்தவும் சொல்லுகிறது .

இந்த வன்முறை மொழி/சாதி/மத வெறி யென பல வழிகளில் வெளிவருகிறது. வன்முறையே தன் சாதியின் /மதத்தின் / மொழியின் மூலமாக தாங்கள் கோழை அல்ல வீரர்கள் தான் என உறுதி செய்கிறார்கள்.இவர்களை தூண்டி விட்டவர்களுக்கு சில ஆதாயங்கள் இருந்தாலும் இதை செய்யும் கலவரக்காரர்களின் மனதில் உள்ள வன்முறையை புரிந்து கொள்வது தான் சரியானதாக இருக்கும். இந்த வன்முறையாளர்கள் வழக்கமான நேரங்களில் சாதாரணமாக இருப்பவர்கள் தாம். இவர்கள் சமூக அக்கறை இல்லாத சமூகத்தின் மோசமான முன்னுதாரணங்கள். படித்தவர்களுக்கு கூட எந்த சமூக அக்கறையும் இருப்பதில்லை. நம் மேல்த் தட்டு வர்க்கம்த் தான் எங்கெங்கு சட்டத்தை மீற முடியுமோ அங்கெல்லாம் மீறுகிறார்கள். அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு நம் சட்டமும் அதிகாரமும் தூங்கிக் கொண்டு இருக்கிறது நம் துரதிருஷ்டம்.அதுவும் பெங்களூரில் அரசுச் சக்கரத்தில் இருக்கும் லஞ்சம் தமிழகத்தை விட பல மடங்கு அதிகம். போலிஸ் முன்னாலேயே பஸ் உடைப்பதை நானேப் பார்த்து இருக்கிறேன். போலிஸ்காரர்கள் ராஜ்குமார் ரசிகர்கள் என்று சொல்லும் கூட்டத்தை எதுவும் செய்ய முடியாது.

நமது கார்ப்பரேட் தலைவர்கள் பிரேம்ஜி ,மூர்த்தி நந்தன் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம் . எனக்கொன்னவோ அவர்கள் பத்திரிகைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள்.சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் தொழில் செய்ய முடியாது . ஆனால் அரசை அவர்கள் கார்ப்பரேட் மசலால் சொல்லுகிற விதத்தில் சொன்னால் வரும் காலங்களிலாவது இந்த மாதிரி வன்முறைகளை தவிர்க்க அரசு முயற்சிக்கலாம். இந்த தடவை வன்முறை இரண்டு நாள்களாகத் தொடர்ந்தது அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது.அதுவும் ராஜ்குமாரின் மரணம் கலவரத்தை உருவாக்கலாம் என்பதை யூகிப்பது கஷ்டமல்ல.அரசு அதைச் செய்யாதது அதன் கையாலாகத் தன்மையை அல்லது அதன் உள் நோக்கத்தைக் காட்டுகிறது .

தமிழர்களின் மேலான வெறுப்புக்கு காவேரி மற்றும் 60 70 களில் பெங்களூர் தமிழர் எல்லா அலுவலகங்களிலும் ஆக்ரமித்து இருந்ததின் மேலான வெறுப்பு என பலக் காரணங்கள் இருக்கிறது.அது இப்போது எல்லா வெளி யாள்களிடமும் வெறுப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

கன்னட மக்கள் கன்னட மொழிமேல் பற்றாக இருப்பதை குறைச் சொல்ல முடியாது . நாமும் அப்படி இருக்கிறவர்கள் தாமே . அவரவர் தம் தாய் மொழியில் பற்றாய் இருப்பது வரவேற்கத் தக்கதே .ஆனால் அது அடுத்தவர்கள் மேல் வெறுப்பு வளர்ப்பது தவறுதான். ஆனால் அதைத் தான் நாம் செய்து கொண்டு இருக்கிறோம் ,நாம் கூட இந்த பிளாக்குகளில் அடுத்த மதத்தைத் திட்டி எழுதுவதும் ,சாதி வெறுப்பைக் காட்டுவதையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். சாதியபிமானமும் /மதப் பற்றும் அதிகம் உள்ளவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக் கிடைத்தால் அவர்களும் ஒரு மனிதனை அது அடுத்த மதக்காரனாகவோ சாதிக்காரனாகவோ இருந்தால் கொல்வதற்கு தயங்க மாட்டார்கள்.அவர்களின் வன்முறை அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது அவ்வுளவு தான் .

ஆதலால் இந்த வன்முறையில் நமக்கும் சிறிது பங்கு இருக்கிறது. எண்ணங்களிலோ எழுத்துக்களிலோ நாம் வன்முறை பண்ணியிருப்போம் . சமூகத் தவறுகளுக்கு அச்சமூகத்தின் எல்லாருக்கும் பங்குண்டு. நமக்கும் கூட..

Labels:

கண்ணகி கற்பு /செருப்பு துடைப்பகட்ட - நம்முடைய கலாச்சாரம்

குஷ்பு/சுஹாசினி விவகாரம் எல்லா தர மக்களாலும் விமர்சிக்கப் பட்டு ,டிசம்பர்ல வரும் புஷ்க்கு கிட்டக் கூட கருத்துக் கேக்கும் அளவுக்கு போயிட்டதால நம்மளும் ஒரு பதிவப் போட்டு சோம்பல் முறிச்சுக்கலாம் ன்னு பாக்கிறேன்.


கற்பு பற்றிய பிரபலங்களின் கருத்தையும் ,அதற்கான அரசியல் ரீதியான எதிர் வினையும் தவிர்த்து விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மற்றவர்களின் கருத்தோடு ஒத்துப் போகிறதா என்பதைப் பேசுவோம்.

நம் சமூக அமைப்பின் பெரும்பான்மையோர் தங்களை மத்திய தர மக்களாகத்தான் கருதுகிறார்கள் ,அது கார் வைத்து இருப்பவர் முதல் ,சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேலைக்கு செல்பவர் வரை தங்களை மத்திய வர்க்கமாகத்தான் பார்க்க விரும்புகிறார்கள்.

அவர்கள் மத்தியில் கற்பு என்பதற்கான மதிப்பீட்டுகளை பற்றி யோசிக்க வேண்டியது தான் இந்த சர்ச்சையின் முக்கியம்.நடிகர் & நடிகை ,இலக்கிய வாதிகள் ,நம்மைப் போன்ற வலைப் பதிவரின் சொந்த விமர்சனங்கள் அதிகளவு பார்த்தாகிவிட்டது.அரசியல்வாதிகளின் தூண்டுதலால் செருப்பு,துடைப்பம் தூக்குபவர்கள் நம்முடைய சமூக அசிங்கங்களில் ஒன்று . அதைப் பற்றிய நம் சமூகத்தின் பிரதிபலிப்புகளும்,விமர்சனங்களும் தான் நாம் வாழும் சமூகத்தின் லட்சணம் நமக்குத் தெரியும்.

பொதுவாக நம் வீடுகளில் ஆண் குழந்தைக்கான சுதந்திரம் ,பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப் படுவது குறைவு தான் .பெண்கள் எவ்வுளவு தான் படித்து இருந்தாலும் ஆண்களுக்கு அடங்கி நடப்பது தான் "நல்ல குடும்ப" பெண்களுக்கு அழகு என்பதை நம் எல்லோரும் கேட்டுத் தான் வளர்ந்து இருப்போம்.சினிமா மற்றும் டிவி ஊடகங்கள் அதை கொஞசம் மிகையாக பிரதிபலிகிறது . ஹீரோ பெண் கற்பு பற்றி விஷ்தரிப்பது எம்ஜியார் காலம் தொட்டு சின்ன்ப்பையன் சிம்பு வரை தமிழ் சினிமாக்களில் தொடர்ச்சியாக நடப்பதற்கு காரணம் "கற்பு" பற்றிய நமது மானோபாவம் மாறாததேக் காரணம்.

நம் தமிழ் நாட்டு சிறு நகரங்களில் பெண் சிரித்து அவள் நண்பர்களுடன் பேசினாலே ஒரு மாதிரியான் பொண்ணுனு முத்திரைக் குத்தி விடுவார்கள் .இதுல் எங்க பாலியல் சுதந்தரம் பற்றி பேசுறது . சிரித்து பேசுவதும் ,தொட்டுப் பேசுவதும் பாலியல் உறவுகளில் முடியும் என்னும் மனப்பான்மை படித்த மக்களிடமே உள்ளது .சொல்லுங்கள் எத்தனைப் பெண்கள் பக்கத்து வீட்டு நண்பருடன் பைக்கில் லிப்ட் கேட்டு வீட்டு வாசலில் வந்து இறங்க முடியும் ?


நம் சமூகத்தில் வெற்றிகரமானப் பெண்களைப் பற்றிக் கூறும் அவதூறுகள் அதிகம் .நடிகை ராதிகாப் பற்றி நான் அடிக்கடி கேட்கும் வசனம் ஒன்று "இவ எல்லாம் சொல்ல வந்துட்டாங்க ,3 மாப்பிளை மாத்தினவ தான " .இதே மாதிரியான விமர்சனம் லக்ஷ்மி பற்றியும் உண்டு . இதே சமயம் சரத் குமார் கற்பு பற்றி சொல்லும் போது எந்த விமர்சன்மும் எழுவதில்லை.அவரும் ஹீரா ,நக்மா என சுற்றியவர் தானே , நம்ம அரசியல்வாதி கூட ராதிகாவை காதலித்து கைவிட்டதாக 80'sல கதைகள் உண்டு .ராதிகா என்ற பெண்மணி சில மற்ற நடிகைகளைப் போல் தற்கொலை செய்யாமல் வெற்றி பெற்றிருப்பது நம் ஆணாதிக்க மனங்களுக்கு ஒவ்வாதவை . செத்துப் போய் இருந்தால் கற்புடையவள் என்று சிலை வைத்து இருப்போமோ என்னவோ. நம் கற்பு பற்றிய பார்வை கண்ணகி காலத்திலேயே முடங்கியுள்ளது .

வள்ளி என்ற "புரட்சி" படம் வந்திருந்தது பார்த்துருப்பீர்கள் ,அதில் "கெட்டு" ப் போன பெண் கெடுத்தவனை கொல்வது புரட்சியாக சித்தரிக்ப் படுவது நம் சிந்தனையின் குறைப்பாட்டை சுட்டுகிறது.

"கெட்டு போனவ" "கற்பழிப்பு" போன்ற வார்த்தைகள் நம் சமூகத்தில் புழங்கும் சாதாரண வார்த்தைகள்.அது போன்ற வார்த்தைகளை குழந்தைகள் கூட பயன் படுத்துவது நம்மிடையே எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தாது . அந்த அளவுக்கு நாம் condition பண்ணப் பட்டு இருக்கிறோம். பத்திரிகை ,சினிமாக்களை குறை சொல்லாதீர்கள் அவை சமூகத்தை பிரதிபலிப்பதாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும் ,இல்லையேல் ஏன் அதிகம் அந்த பத்திரிகைகள் விற்க வேண்டும் ,அல்லது படங்கள் ஏன் அதிகம் ஓட வேண்டும் . So blame us ,not others .

எனக்கு chaos theory மேல் நம்ப்பிக்கை உண்டு , நம் சமூக உயர்வுக்கும் /சீரழிவுக்கும் நம்முடைய சிறு செயல் கூட காரணம் என்பது என் நம்பிக்கை. பெரும்பான்மையோர் எதுவுமே சொல்வதில்லையே அவர்களை ஏன் குற்றம் சொல்லுகிறேன் என்று கேட்காதீர்கள் , அப்படி இருப்பது கூட ஒரு செயல் தான் .அது நல்லதாகவோ கெட்டதாகவோ சமுகத்தில் பிரதிபலிக்கும் .

செருப்பு / துடைப்பக்கட்ட காலச்சாரம் தான் நம்முடைய கலாச்சாரம் என்று நம் அரசியல் வாதிகள் சொல்வதற்கு நம் மக்கள் எதுவும் சொல்லாமல் இருப்பது அதை ஆமோதிப்பதாகத் தான் படுகிறது . இதே அரசியல் வாதிகள் தேர்தலில் ஜெயித்து வருவதை பார்க்கும் போது அவர்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள் என்பதே உண்மை . குஷ்பு/சுகாசினிக்கு ஆதரவு தரும் எவருமே மக்கள் மன்றத்தில் ஜெயிக்க முடியாது .அது வேறு உலகம் அறிவு ஜீவிகள் அல்லது அப்படி காட்ட விரும்புவோரின் உலகம் ,அதற்கும் நம் தமிழ் சமூகத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது .சொல்லுங்கள் எத்தனைப் பேருக்கு அ.மார்க்ஸ் ,சாருவையும் ,ம்னுஷ்யபுத்திரனையும் தெரியும் ,அதே சமயம் அந்துமணி ,ரமணி சந்திரன் எவ்வுளவு பிரபலம் . நமக்கு வைரமுத்து தானே கவிஅரசர் ..இந்த சமூகத்தில் கற்பு பற்றி ஆரோக்கியமான் விவாதத்தை எதிர் பார்ப்பது முட்டாள்த்தனம் .

நம்முடைய கோர்ட் பாருங்கள் நம்மைப் போல்தான் இருக்கிறது , சட்டத்துக்கு ommon sense கூடத் தேவையில்லை போலிருக்கிறது .


கருத்து சொல்லுறதுக்காக "கருத்து" ன்னு இணையம் ஒண்ணை கனிமொழியும்,கார்த்திக்கும் ஆரம்பிச்சிருக்காங்க .பாருங்க கருத்து சொல்லுறதுக்கு கூட இங்க அரசியல் பின் புலம் வேண்டியிருக்கு.

Labels:

கற்பு என்னும் மாயை

குஷ்பு விவகாரம் நாளிதழ்களிலும்,டி.விகளிலும் கலக்கிகொண்டு இருக்கிறது,ஆளாளுக்கு கற்பு பற்றியும் ,தமிழ் தாய்மார்களை அவமானபடுத்தியதாய் கூறப்பட்ட குஷ்புவின் கருத்து வெளியாகிய தமிழ் இந்தியா டூடே படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் கிடைக்கும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய சர்வேக்கு பதிலளிக்கையில் சொன்னக் கருத்துக்கள் தான் பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிகிறது.

விகடனிலிருந்து " பெண்கள் திருமணமாகும்ப் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று எண்ணங்களில் இருந்து நமது சமுதாயம் விடுதலையடைய வேண்டும்.கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான. "

இந்த கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குப் படவில்லை.கற்பை கன்னித்தன்மையோடு மட்டும் பொருத்திப் பார்க்கும் சமூகத்தின் குறைபாட்டின்
வக்கிரப் பார்வைதான் குஷ்புவின் இந்த கருத்துக்கான எதிர்வினை.கற்பு என்னும் தமிழ் வார்த்தையின் சமமான வார்த்தையாக நான் பார்ப்பது fidelity யைத்தான்.
virginity யை அல்ல .பெண்களின் கன்னித்தன்மைப் பற்றி கவலைப் படும் சமூகம் ஆண்களுக்கான எந்த வரையறைகளையும் வைப்பதில்லை. இந்த தமிழ் கலாச்சார அரசியலில் பெண்ணியம் பேசும் எவரும் குஷ்புவுக்கு பரிந்து வராதது என்ன அரசியலோ.

ஆண்வழிச் சமூகத்தின் அவலங்களில் இந்த கற்பு நடுத்தர மக்களால் தாண்ட முடியாத லட்சுமணக் கோடு.கொடுமை என்ன வென்றால் ,இதை உயர்த்திப்
பிடிக்கும் ஆண்களில் முக்கால்வேசிப் பேர் கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்ற கருத்தாக்கத்தை மதிப்பவர்கள் அல்ல.

பெண்ணியம் பேசும் பிரபலங்களின் மவுனம் ஆச்சரியப்படவைக்கிறது. நியாத்தில் அவர்கள் குஷ்புவுக்கு பரிந்து வர வேண்டும்.அவர்களின் மவுனம் அரசியல் அல்லது கோழைத்தனம்.

உணர்ச்சிகள் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொது தானே .அதில் ஒருவர் மட்டும் அடக்கி வைத்துக் கொண்டு தமிழ் காலாச்சாரத்தை காக்க வேண்டும் என
நினைப்பது முட்டாள்தனம்.இன்று கல்யாண வயது பொருளாதார காரணங்களால் தள்ளிப் போகும் போது ,சினிமா ,டி.வி க்களில் காணும் விரசம் தூண்டும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு கன்னிமையை தக்க வைத்துக் கொள்வது கடினம் தான்.பெரு நகரங்களில் disco கலாச்சாரத் தில் கற்பு எனும் மாயை விரைவில் தகர்ந்து விடும் .அதுவே சிறு நகரங்களின் அருகில் இருக்கும் அருவிகளிலும் ,பூங்காகளிலும் கொஞ்சம் தொலைந்து கொண்டுத்தான் இருக்கிறது.

இராம தாஸ்,திருமா விடம் இருந்து இதைவிட எதுவும் எதிர் பார்க்க முடியாது.தங்கர் விவகாரத்தில் குஷ்பு மேல் கடுப்பில் இருந்த அவர்களுக்கு நல்ல வாய்ப்பு.ஆனால் தங்கர் விவகாரம் இல்லாதிருந்தாலும் இதைத்தான் அவர்களிடம் இருந்து எதிர் பார்க்க முடியும் ,அவர்களின் முற்ப்போக்கு சிந்தனை ஆண்களுக்கு மட்டுமே. "அடக்கி வைக்கப் பட்ட பால் உணர்ச்சி தான் உலகின் அனைத்து வன்முறைக்கும் காரணம்" என்ற (யார் சொன்னது ,மறந்து விட்டது ) கருத்து இவர்களின் வன்முறை போரட்டத்துக்கும் பொருந்துமோ?

தமிழ் கலாச்சாரத்தின் காவலர்களாக காட்டிக் கொள்ளும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ,தயைக் கூர்ந்து தமிழ் கலாச்சாரத்தை "தொடைகளுக்கு நடுவில்
சுருக்கி விடாதீர்கள் " .

Labels: