படிப்பது என்பது அம்புலி மாமாவில் இருந்து ஆரம்ப்பித்து இப்போது கண்டைதையும் படிப்பது என்று ஆகி விட்டது ,படித்ததில் பிடித்ததை எழுதுவது என்பது கொஞ்சம் கடினம் . ஆனாலும் எழுத முயற்சிப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று தான் எண்ணுகிறேன் .
பாலகுமாரனின் கடலோரக் குருவிகள் நல்லதொரு நாவல்.குறிப்பாய் கடைசியில் உள்ள கதைக்காகவும்,கடைசி இரண்டு அத்தியாயங்களின்எழுத்துக்காகவும் எனக்குப் பிடிக்கும் .அதிகம் வாசிப்பு அனுபவம் இல்லாத ஒருவருக்கும் புரியும் நடை எனக்குப் பிடிக்கும்.பால குமாரன் ஒரு காலத்தில் அதிகம் பிடிப்பவராக இருந்தார்.
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் இந்தக் கதைகளை பிடிக்காமல் இருப்பது கடினம் .அவரின் நடை அலாதியானது.சுஜாதாவின்மேல் சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தவிர்க்க முடியாதவர் ,அவரின் எல்லா எழுத்துக்களையும்படிக்க முயற்சிப்பேன், வசந்த் கணேஷ் தவிர :-) .சுஜாதா வின் நடையும் அவரின் எள்ளலும் பிடித்தது .
சு செல்லப்பாவின் வாடிவாசல்படித்துப் பாருங்கள். ஜல்லிக் கட்டு பார்ப்பது போன்ற பிரமிப்பை கொடுக்கும் நாவல்.இப்பவும் எப்பவாதுஎடுத்து ஒரே வாசிப்பில் படிப்பேன்.நன்றி காலச்சுவடுக்கு இதை மறு பதிப்பு இட்டதுக்காக.
தொ பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள் நம் கலாச்சாரத்தை பற்றிய ஒரு ஆய்வு மாதிரியான நூல் ,நெல்லை கன்யாகுமரி மாவட்டங்களில்இன்னமும் செய்யப்படும் சில பழக்க வழக்கங்களையும் இந்த புத்தகம் சொல்லியிருந்தது .அத்தன் என்னும்சொல் பண்டையத் தமிழில் அப்பாவைக் குறிப்பதாக சொல்லியிருந்தார்,இன்னமும் தமிழ் முஸ்லீம்கள்அத்தா என்று கூப்பிடுவதை ஞாபகப் படுத்தியது.
அ.முத்துசாமியின் "அங்கே எந்த நேரம் / மஹாராஜவின் ரயில் வண்டி பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் .இந்த இரண்டு சிறுகதை தொகுப்புகளும் அருமை.அவர்நடையில் இயல்பாய் இருக்கும் பகடி ரசிக்க வைக்கும் .இவரைப் பற்றி தனிப் பதிவேப் போடலாம் அவ்வுளவுப் பிடிக்கும் எனக்கு.
ஷோபா சக்தியின் ம்ஷோபா சக்தியின் கதை உலகம் ஈழப் போரட்டத்தின் மறுபக்கங்களையும் புலம் பெயர் வாழிவின்வலிகளையும் தொட்டுச் சொல்வதும் அவரின் நடையும் எனக்குப் பிடிக்கும் .கொரில்லாவும் பிடித்ததுதான்.சத்திய கடுதாசியில் அவர் எழுதுவதையும் வாசித்து வருகிறேன்.
ஜெயமோகனின் ஏழாம் உலகம் அவரின் மற்ற நாவல்களில் இருந்து வேறுபட்ட மொழி நடையை கொண்ட நாவல்.அவரின் விஷ்ணு புரம்அல்லது பின் தொடரும் நிழல் போல் கடினமான மொழி நடையோ அல்லது சிக்கலான கதை அமைப்போ இல்லாத இந்த நாவல் வாழ்க்கையில் நாம் சந்திக்க மறுக்கும் ஒரு கறுப்பு உலகத்தின் கதை.படித்த பின் விசாரித்தில் இது நடக்கிற உண்மை என்றே சொன்னார்கள். ஜெய மோகனை மறுப்பவர்கள் கூடஇந்த நாவல் பிடிக்கும் .ஜெய மோகனின் சிறு கதைகளில் பிடித்த மானது மாடன் மோட்சம் ,டார்த்தீனியம் ,ஜமம்மதிகினி
சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதைநம்மநாகர்கோவில் வேப்ப மூடு ஜங்க்சனை வைத்து புனையப் பட்ட நாவல் ,அதன் மொழிநடையும் பகடியும் எனக்குப் பிடித்தது.ஜெ ஜெ யின் குறிப்புகள் சில சமயம் சலிக்க வைக்கும் ,இதுஅப்படி இல்லை என்று கண்டிப்பாய் சொல்லலாம..இவர் மொழி பெயர்த்த தழியின் தோட்டியின் மகன் அருமையானது.
தோப்பில் முகமது மீரானின் கடலோர கிராமத்தின் கதை தேங்காப் பட்டின இஸ்லாமிய வாழ்க்கை பற்றிய நாவல் .அருமையான நடை ,மொழியும் ,இக்கதையின்ஆக்கமும் படிக்கத் தூண்டியவை .
சாருவின் நோ நோ கதைகள் இச் சிறுகதை தொகுப்பு அவரின் மொழி நடைக்கும் நையாண்டிக்கும் எழுதாப் பொருள் என ஒண்ணும் கிடையாது என மரபுகளை உடைக்கும் தன்மைக்காகவும் பிடிக்கும் .
கி ராஜ நாரயணின் கோபல்ல புர கிராமம் கிரா வின் ரசிகன் நான் ,மொழி நடைக்காக வே படிக்கலாம்.மற்ற நாவல்களும் படித்து உள்ளேன்.வெகு ஜன ஊடகத்திலும் தெரிந்தவர் என்பதால் நண்பர்களுடன் இவர் எழுத்தைப் பற்றி விவாதிக்க முடியும் .
ராம கிருஷ்ணனின் உப பாண்டவம் மகாபாரதத்தின் கதைகளை ஒத்த கதை.நல்ல வாசிப்பனுபவம் ,மகாபாரதம் எத்தனை முறை படித்தாலும்அலுக்காத ஒரு காவியம் ,அதை படிப்பதால் வரும் சிந்தனைகள் அருமை.இதைப் போல பாரதத்தின் கதைகளை வித்தியாசமாக எழுத முயற்சிக்கலாம் .
இரண்டாம் ஜாமத்தின் கதை -சல்மாசல்மாவின் கவிதை பிடித்து ,இந்த புத்த்கமும் ஒரு நல்ல முயற்சி .இது பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சல்மாவின் எழுத்தில் குறே யேதும் இல்லை
நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம் சூபி ஒருவரைப் பற்றிய கதை ,சூபி ஆன்மீகத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் படிக்க வேண்டியப் புத்தகம்,கதை என்ற் போதிலும் இது ரூமியின் அனுபவமாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம் .
பெருமாள் முருகனின் கூளமாதாரி ஒடுக்கப் பட்டவர்களின் வாழுக்கை முறையைப் சொல்லிய நாவல்,சில உண்மைகள் சுடும் .மாயா உலகில் சமத்துவம் பேசிக் கழியும் மக்களுக்கு இது அதிர்ச்சித் தரும் நாவல் .இந்த மாதிரியான வாழ்க்கை முறை இன்று இருக்குமா என்பதில் சந்தேகம் இருந்தாலும் 20 வருடங்களுக்கு இப்படி இருந்தது என்பதில் ஐயமில்லை.
இமையத்தின் கோவேறு கழுதைகள்துணி வெளுக்கும் வண்ணார் வாழ்க்கை முறை பற்றிய கதை ,கிருதுவராக மாறிய்ம் பெரிதாய் ஒன்றும் வாழ்க்கை முறையில் மாற்ற மில்லை .சில நிகழ்ச்சிகள் எங்கள் ஊரில் இருந்த வண்ணார் குடும்பத்தின் வாழ்க்கையை ஞாபகப் படுத்தியது.இது போன்ற கதைகள் தான் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை வரலாற்றுக்கு சொல்லும் .
இது அனைத்தையும் என் நினைவில் இருந்து எழுதியது ,அப்பொழுது தான் மனடில் நின்றதை எழுத முடியும் என்ற நினைப்போடு .கவிதைத் தொகுப்புகளையும் ஆங்கிலப் புத்தகங்களையும் இதில் சேர்க்க வில்லை .
வாசிப்பதில் ஒன்றும் பெருசில்லை என்ன புரிந்து கொண்டோம் என்பது தான் முக்கியமானது ..வாழ்க்கையை எல்லா பக்கங்களில் இருந்தும் புரிந்து கொள்ளவே என் வாசிப்பு முயற்சி , இதுவும் ஒரு தேடல்தான் ,எனக்கான புத்தகம் எங்கோ ஒளிந்திருக்கும் அது தெரியும் வரை வாசிப்பு தான் சாஸ்வதம்
ஆஙகிலத்தில் படித்தது குறைவு தான் ,பெரும்பாலும் அரசியல் அல்லது ஆன்மீக புத்தகங்கள் தான் படிப்பது ,ஒரு காலத்தில் சிட்னி செல்டன் ,ராபர்ட் லூடம் ,ஜான் கிரிசாம் போன்றவர்களின் கதைகளை படித்துக் கொண்டிருந்தேன் ,அதை தாண்டி ஆங்கிலத்தில் இலக்கியத் தரமுள்ள கதைகளுக்கு நகர முடியவில்லை .மொழி அறிவின் போதாமையும் ஒரு காரணம் .நான் பிக்சன் வாசிப்பு இப்போது அதிகம் ஆகியிருக்கிறது ஆனால் அதிகம் அரசியல் படிக்கிறது போல் தோன்றுகிறது.
Labels: வாசிப்பு